Monday, June 20, 2011

Buried 2010 - 108 தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்

நம் வீட்டில் நாம் பார்க்காத நிறைய படங்கள் வைத்து இருப்போம். காரணம் நேரம் இல்லை, அல்லது அந்த படத்தின் போஸ்டர் அந்த அளவுக்கு நம்மை பார்க்க தூண்டாமல் இருக்கலாம். அப்படி என்னிடம் இருந்த 30 படங்களில் இதுவும் ஒன்று. சில படங்களை இணையத்தில் பார்த்தோ அல்லது கேள்வி பட்டோ தரவிறக்கம் செய்து அதை பார்த்த போது கடுப்பை தரும் படமாக இருக்கும் போது அறிமுகம் இல்லாத படங்களை தரவிறக்கம் செய்யவும் அப்படியே செய்தாலும் பார்க்கவும் ஒரு சின்ன பயம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் பல நேரங்களில் பல படங்களை கோபப்பட்டு shift+delete பொத்தான்களை அழுத்த வேண்டியதாகிறது. அல்லது சில படங்கள் நம்மை தூங்க வைக்க உதவுகின்றது.Buried. படத்தின் கதை : ஒரு மர பெட்டிக்குள் வைத்து உயிரோடு புதைக்கப்பட்டவன் அதிலிருந்து தப்பிக்க போராடுவதுதான் கதை. கதைன்னு சொல்ல முடியாது. நிகழ்வுகள் அப்படினு சொல்லலாம்.

படத்தில் மொத்தம் காட்டப்படுவது இரண்டு முகம் . ஒரு பாம்பு. ஒரு பெட்டி. ஒரு லைட்டர் (தீ பற்ற வைக்க உதவும் தன்னியகமுடைய பொருள்). ஒரு டார்ச்(கைப்பந்த மின்விளக்கு). ஒரு செல்போன்(கைப்பேசி). ஒரு கத்தி. ஒரு ஒயின் டின். கொஞ்சம் மண்.

சத்தம் : மொத்தமா ஒரு 10 பேர் குரல். பின்னணி இசை. மண் சரியும் போன்ற சப்தங்கள்.

திரைக்கதை, படத்தொகுப்பு, ஒலி ஆகிய பிரிவுகளுக்கு 3 விருதுகளுடன், 2 மில்லியனுக்கும் குறைவான செலவில் எடுக்கப்பட்டு 20 மில்லியன் அளவுக்கு விற்ற படம்.


படத்துல செட் (கலை), கேமரா (ஒளிப்பதிவு), ஒரு தனி மனிதனின் நடிப்பு. பின்னணி இசை. எல்லாமே பக்கா. (அவ்ளோ தான் இருக்கு) கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.

இதெல்லாம் சரி. அது என்ன 108 தமிழ் இயக்குனர்கள் பார்க்க வேண்டிய படம்? சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பார்த்த போது , அதில் ஒருவர் சொன்ன புள்ளி விபரம் (கொஞ்சம் எண்ணிக்கைல கூடவோ குறையவோ இருக்கலாம்- அது என் தப்புதான்) என்னனா "கடந்த வருடம் 150 தமிழ் படங்கள் வெளிவந்து இருக்கு. அதுல 108 படங்கள் திரையரங்கில் ஒரு நாளோ ஒரு காட்சியோ தான் ஓடி இருக்கு. ஒரு படத்துக்கு சராசரியா 2.5 கோடி ரூபாய் செலவுன்னு பார்த்தாகூட கிட்ட தட்ட 250 கோடி ரூபாய் நஷ்டமாகி இருக்கும்" அப்படின்னு வருத்தமா சொன்னார். அதுல 90 சதவிகிதம் முழுக்க முழுக்க புது குழு (நடிப்பு & தொழில் நுட்பம்) அப்படின்னு கொசுறு தகவல்.

என்னை பொறுத்தவரை அந்த 108 இயக்குனர்களும் அவர்களது வேலையை சரியாக செய்யவில்லை. சில தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு தானே தயாரித்து நடிக்கவும் செய்தார்கள். சிலர் இயக்கம் செய்தார்கள். சிலர் புதுமுகமாக அறிமுகம் செய்ய காசு வாங்கி கொண்டு சிலரை நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். சிலர் கணக்கு காட்ட படம் எடுத்தார்கள். சிலர் படம் காட்ட படம் எடுத்தார்கள். மொத்தத்தில் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகொன்டர்கள். நிலைமை இதே போல போய்க்கொண்டு இருந்தால் குறைந்த முதலீட்டிற்க்கான கதையுடன் சுத்தி வருபவர்களை நல்லா படம் எடுக்க முயற்சி செய்யும் தயாரிப்பாளர்கள் கூட மனம் வந்து முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள்.

30 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரையிலான முதலீட்டுக்காக வித்தியாசமான திரைகதைகளுடன் எத்தனையோ பேர் கோடம்பாக்கத்தையும் வடபழநியையும் சுத்தி வந்தாலும் அவர்களை சீண்ட கூட ஆட்கள் இருப்பதில்லை. தனக்கு தெரிந்தவன் அல்லது துதி பாடுபவன் இவர்களுக்கு தான் முன்னுரிமை. அப்படி போகும் போது குறைந்த பட்சம் திரைக்கதைக்கான திட்டமிடலாவது தெரிந்து இருகின்றதா என்றால், நிச்சயம் இல்லை என்பதுதான் என் எண்ணம்.

இங்கே நான் சொல்லி இருக்கும் Buried திரைப்படம் அப்படியே தமிழில் எடுக்க சொல்லவில்லை. எடுத்தாலும் ஓடாது. இந்த அறிமுகம் வித்தியாசமாய் சிந்திக்கவும் அதை செயல்படுத்தவும் தான். குறைந்த பணத்தில் படம் எடுக்கும் போது இதை போன்ற சில படங்களை பார்த்தால் நிச்சயம் நம் மனமும் எதையாவது யோசிக்க தூண்டும். அந்த வகையில் படம் தோற்றால் கூட படத்தின் பெயராவது நிலைத்து நிற்கும் வித்தியாசமாய் இருகின்றது என்பதற்காக.! எப்பயும் போல ஒரு ஹீரோ , ஒரு ஹீரோயினை லவ் பன்னார்னு கதையை ஆரம்பிக்கறதா இருந்த திரையரங்குல இருக்கைல வேற படம் ஓடும். அதை அந்த படத்துல நடிச்சி இருக்கறவங்க பார்க்க வேண்டியது தான்.

அப்படியே இந்த படங்களையும் பார்த்தால் நல்லது.உங்கள் வீட்டில் நிறைய திரைப்படங்களை இன்னும் பார்க்காமல் வைத்து இருக்கின்றீர்களா? முடிந்த வரை உடனே பார்க்க முயற்சி செய்யுங்கள். அதில் இந்த படம் போல சில படங்களாவது இருக்கும்.

தண்டோரா: எனது முந்தைய பதிவு வரலாறு காணாத அளவு ஹிட்ஸ் (1200) இன்ட்லில ஓட்டு 23 கிடைச்சி இருக்கறப்போ என்ன தோனுதுனா , ..............? அப்படி எல்லாம் இருக்காது. எல்லோரும் நல்லா சினிமாவை நேசிப்பவர்கள்னு தான் நினைச்சி சொல்லிகரன் 1200 நன்றிகள் ....!

1 comment:

Anonymous said...

நல்லா இருக்கு.தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.