Saturday, March 10, 2012

ஒரு மரண தண்டனை கைதியின் கடைசி நிமிடம்

இது ஒரு குறும்படம். சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கேயோ ஒரு திரைப்பட விழாவில் பார்த்தது, படம் பேர் மறந்திருந்தாலும் காட்சிகள் நினைவிலேயே நிழலாடின. திடீர் என்று தேடினேன், கிடைத்தது. இதோ உங்களுக்காக இந்த திரைப்படம். நிச்சயம் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் இந்த கருப்பு வெள்ளை திரைப்படம்.





படத்தின் சிறப்புகளை பற்றி நீங்களே சின்னதாக கமெண்ட் போடவும். அப்புறம் 20 நிமிஷம் இந்த படத்தை காத்திருந்து பார்க்க முடியாதவர்கள் சில பேர் செய்து வைத்துள்ள இதன் short film version (edited) ஐ பார்க்கலாம். குறும்படத்தையே இன்னும் எடிட் செய்து குறும்படமாக்க எப்படித்தான் மனசு வருதோ?

Saturday, February 4, 2012

சூப் சாப்பிடுவது சட்டப்படி குற்றமாகிவிட்டதா சென்னையில்?

நானும் உதவி இயக்குனர் நண்பர்கள் மூன்று பேரும் (மொத்தம் 4 பேர்) மாலை ஐந்து மணி அளவில் வடபழனி பேருந்து நிலையம் அருகே சந்திச்சி (முதல் சந்திப்பு) பேசிட்டு இருந்தோம். நண்பர்கள் டீ சாப்பிடலாம் என்று சொன்னார்கள். நான்தான் டீ வேண்டாம், பக்கத்துல ஒரு பார்க் இருக்கு , அங்க போன மட்டன் சூப் பல வகைகளில் கிடைக்கும்னு சொன்னேன். சரின்னு எல்லாரும் கிளம்பினோம்

அது ஒரு தள்ளுவண்டி சூப் கடை. பூங்காவுக்கு வெளியில இருக்கு (அதுல ரெண்டு பேர் இது வரைக்கும் அந்த பூங்கா பக்கமே வந்ததில்லை). நாங்க போன டைம் நல்ல பகலா இருந்ததால இன்னும் சூப் ரெடி ஆகல. சரின்னு பார்க் உள்ள ஒரு ரவுண்டு போனோம். குடிச்சிட்டு மட்டையானவர் ஒருவர் ஆரம்பத்துலேயே புல் தரையில் சுருண்டு கிடந்தார். போக போக காதலர்கள், குடும்ப இஸ்திரிகள், குழந்தைகள் எல்லாம் அங்க அங்க உட்கார்ந்துகிட்டு விளையாடிகிட்டு இருந்தாங்க. நாங்க வெளிய வந்து சூப் குடிக்க ஆரம்பிச்சோம்

அதுவரை எந்த பிரச்சனையும் இல்ல. அப்ப பார்த்து ஒரு போலிஸ் வண்டி வந்து நின்னுச்சி. அந்த வண்டியில ஒரு டிரைவர், ஒரு (பெண்) உதவி ஆய்வாளர் மட்டும் தான் இருந்தாங்க. அந்த வண்டி உள்ள நல்ல படிச்ச லுக்ல , வெள்ளையா ஒரு பணக்கார வீட்டு பையன் உட்கார்ந்துகிட்டு இருந்தான். எஸ் ஐ இறங்கி வந்து எல்லா போலீசும் செய்வது போல இங்க நிக்க கூடாது, அங்க உட்கார கூடாதுனு லத்தியால தட்டிகிட்டே சூப் கடை கிட்ட வந்து கத்திட்டு இங்க கடை போட கூடாதுனு (மாசம் மாசம் சூப்-பும் பணமும் மட்டும் வேணும் போல, ஆமாம் கவர்மென்ட் இடத்தை எல்லாம் போலிஸ் காரங்க வாடைகைக்கு விடலாம்னு சட்டம் ஏதாவது இருக்கா என்ன?) கத்திட்டு பார்க் உள்ள போனாங்க.


லவ்வர்சை வெளியே துரத்தி விட்டாங்க (நல்ல பசங்க தான் போல அவ்ளோ டிஸ்டன்ஸ்). அப்புறம் பார்க் உள்ள கருப்பா இருந்த ரெண்டு பேரை வெளிய கொண்டுவந்து வண்டியில வலுக்கட்டாயமா உட்காரவைத்தாங்க. அதோடு போவும் பிரச்சனை னு பார்த்தா சூப் சாப்பிட்டு கொண்டிருந்த நண்பன் ஒருவனை (தலை முடிய வாருங்கனு சொன்னா எவன் கேட்கிறான்?) கருப்பா இருந்த ஒரே காரணத்துக்காக ஏற சொல்லிட்டாங்க. பையன் எவ்ளோ சொல்லியும் விட முடியாதுன்னு சொல்லிடானுங்க. எங்களுடன் இருந்த இன்னொரு நண்பன் பேச அவனையும் உள்ளே உட்காரவைச்சி வண்டிய கிளப்பிட்டாங்க. முதல்ல படுத்துங்கிடந்த போதையில மட்டையானவனை என்ன பண்ண முடியும்? ஆம்பளை போலிஸ் னா தூக்கி கொண்டு வரலாம். (பட் லேடி போலிஸ்)

சூப் கடைக்காரருக்கு காசை கொடுத்துட்டு விருகம்பக்கம் போலிஸ் ஸ்டேஷன் போனா ஒரு போர்டு. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களிடம் காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை னு. (நிசமான சட்டமா சாமி?)

நாங்க என் நண்பர்களுக்காக வந்த மாதிரி இன்னும் பல பேர் அவரவர் நண்பர்களுக்காக வந்து, கல்யாண வீட்டு வாசல் மாதிரி கூட்டமா இருந்தது நுழைவு.



போயிட்டு என்ன விஷயமா புடிச்சீங்கனு கேட்டா சூப் கடையில தகராறுனு ஒரு ஏட்டு விரைப்பா சொல்ல , நான் அங்க தான் இருந்தேன் தகராறு எல்லாம் ஒண்ணுமில்லையே னு கேட்டா “இன்னிக்கு இல்ல நேத்து தகராறு” சொல்லி எதுனா பேசணும்னா வெளிய எஸ் ஐ (பெண்) இருக்காங்க அங்க போயிட்டு பெசிக்கோங்கனு சொல்லிட்டு எல்லாரையும் வரிசையில வந்து பேர் முகவரி எல்லாம் கொடுக்க சொல்லிட்டு இருந்தார்.

(நல்லா செய்யுது சட்டம் கடைமையை – நேத்து தகராறுக்கு இன்னிக்கு இருந்தவன் என்னய்யா பண்ணுவான்?)

அந்த மேடம் கிட்ட கேட்டா, சும்மா தான் விசாரிச்சிட்டு பேர் முகவரி வாங்கிகிட்டு பத்து நிமிசத்துல வெளியே அனுப்பிடுவோம்னு சொல்லிட்டு வேகமா அடுத்த ரவுண்டுக்கு ஆள் பிடிக்க கிளம்பிட்டாங்க.

போதையில இருந்தவனை எல்லாம் தனியா உட்கார வைச்சிட்டு சும்மா இருந்தவனை மட்டும் பேர் முகவரி எல்லாம் வாங்கிட்டு அனுப்ப்பிடாங்க. வெளிய வரும் போது பார்த்தா (லவ்வர்ஸ் ல இருந்த) அந்த பையன். பார்க் ல இருந்து வெளியே போனவன் ஒழுங்கா வீட்டுக்கு போய் இருக்கலாம். சிக்னல் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்து இருக்கான், போலிஸ் வண்டி U turn போட, இவனை பார்த்த எஸ் ஐ அவனை தூக்கி வண்டி உள்ள போட, அந்த பொண்ணுக்கு பயந்து என்ன ஆகி இருக்குமோ?

கடைசியா அந்த educated look ல இருந்தவன ஏன் புடிச்சாங்க னு கேட்ட அப்பத்தான் தெரிஞ்சுது பய புள்ள கஞ்சா யூஸ் பண்ணிட்டு அவ்வங்க வீட்டில் டார்ச்சர் பண்ணிட்டு இருக்க அவங்க அம்மா அப்பா போலிஸ் கு போன் பண்ணி பையனை புடிச்சி கொடுக்க (நல்ல அப்பா நல்ல அம்மா உண்மையிலேயே) அவன் இந்த பார்க் ல தான் கஞ்சா வாங்கினேன் னு கை காட்டி இருக்கான். அதான் ரெய்டு.

நாங்க உதவி இயக்குனர்களாக இருப்பதால் இது ஒரு தேவையான அனுபவமாக கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் புதிதாக அங்கே செல்பவர்களுக்கு? எந்த தப்பையும் பண்ணாம (குடிச்சிட்டு) அங்க இருந்தவங்களுக்கு எல்லாம் தப்பு பண்ணாம ஜெயிலுக்குள்ள ஒரு நாள் இருந்துட்டோமே தப்பு பண்ணினா என்ன என்ற எண்ணம் வந்தா என்ன ஆகும்?

அப்ப கூட ஒரு நியாயம் தர்மம்னு ஒன்னும் இல்லையா “சூப் குடிச்சிட்டு இருந்தவன் என்ன தப்பு பண்ணான்?” ஒரு வேலை சூப் குடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகிவிட்டதா சட்டத்தில்?

Tuesday, January 31, 2012

திரைக்கதை பயிற்சி புத்தகம் - thiraikkathai payirchi (சுஜாதா)


கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் Facebook மற்றும் twitter ல எல்லாம் இந்த புக் ஐ கேட்டு மெசேஜ் பண்ணி இருந்தேன். ஆனா எந்த புண்ணியவானும் இதற்க்கு இருக்குனு பதில் சொல்லல. ஒருவேளை சினிமா சம்பந்த பட்டவங்க யாரும் பார்க்காம இருந்து இருக்கலாம். இல்லனா உண்மையிலேயே யாரிடமும் இல்லாமல் இருந்து இருக்கலாம்

தி.நகர், ஸ்பென்சர், பிராட்வே, பாரிஸ் னு பல இடங்களில் தேடி கிடைக்காம கடைசியா publication கடைக்கே போகலாம்னு மந்தைவெளி கிளம்பி போற வழியில திருவல்லிக்கேணி தெருக்களில் வரிசையா புத்தக கடைங்க இருப்பதை பார்த்து சும்மா கேட்டு பார்ப்போம்னு அவசரமா இறங்கி கேட்டா நாலு கடையில இல்லன்னு சொல்லிட்டாங்க. அப்பறமா ஏதோ ஒரு கடையில இருந்துதுன்னு வாங்கினேன். விலை 130.

இதை ஏன் விலாவரியா சொல்லணும்? கெட்ட விஷயம் எல்லாம் ரொம்ப ஈசியா கிடைக்குது நம்ம நாட்டுல. மத்ததை எல்லாம் தேடி அலைய வேண்டியதா இருக்கு. (மெசேஜ்?)

உயிர்மை பதிப்பகம். மொத்தம் 93 பக்கம். a4 அளவு. எழுத்தாளர் சுஜாதா. திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தின் அடுத்த பகுதின்னு சொல்லலாம்.
இந்த திரைக்கதை பயிற்சி புத்தகம் 130 ரூபாய் விலை என்பது எனக்கு கொஞ்சம் அதிகமாய் படுகின்றது. காரணம் உண்மையிலேயே இதற்க்கு 17 தாள்கள் அல்லது 34 பக்கங்கள் போதும் பிரின்ட் செய்ய. இந்த புத்தகம் திரைக்கதையின் முக்கிய அம்சமான கரு, பாத்திர படைப்பு, உறவுகள், கதை அமைப்பு, கதை சம்பவங்கள், கதாபாத்திர வரைபடம், கதை அமைப்பிற்கான பயிற்சி படம், சீன் ஆர்டர், என்று 8 பகுதி (chapter). ஒவ்வொரு பகுதியை பற்றியும் ஒரு பக்க அளவில் சிறு விளக்கமும் அதை தொடர்ந்து ஒரு பயிற்சி படிவமும்(fill in the blanks) உள்ளது.

ஆக 8 பக்கம் குறிப்பும் 8 பக்க படிவமும் சேத்து மொத்தம் 16 பக்கத்துல(அப்படியே ஒன்னு ரெண்டு பக்கம் அதிகமா போனா கூட முன்ன சொன்னா மாதிரி 34 பக்கத்துல) புத்தகத்தின் அளவை முடிச்சி இருக்கலாம். அப்படி கம்மியான பக்கத்துல முடிச்சிட்டா நிறைய விலை விற்க முடியாதுன்னு அந்த பயிற்சி படிவங்களை 5 copy கொடுத்து பக்கத்தின் அளவை ஏத்தி இருக்காங்க.

திரைப்படத்துறையில் உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு உபயோகமான புத்தகம். கதையை, கதா பாத்திரங்களை, கதை அமைப்பை நல்ல முறையில் திட்டமிட பயன்படுத்திக்கொள்ளலாம். வாங்கி பயனடையுங்கள்.

Saturday, January 21, 2012

தினமலர் நடுநிலையான நேர்மையான நாளேடா?

தினமலர் உண்மையின் உரைகல்?

தினமலர் என்னும் தமிழ் தினசரி நாளேட்டை பற்றி படிக்கும் பழக்கம் உள்ள உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் நாளேடுகளில் தினத்தந்தி தினமணி தினகரன் & தினமலர் ஆகியவை இங்கே கொலோச்சி கொண்டிருக்கின்றது.

தினத்தந்தி எந்த கட்சியை பற்றியும் கவலைப்படாத பத்திரிகை. யாருக்கும் வக்காலத்து வாங்குவதும் இல்லை. எந்த கட்சியையும் விமர்சனம் செய்வதுமில்லை. தலையங்கம் அல்லது கட்டுரை எழுதினால் எப்போதாவது தங்கள் நிலையிலிருந்து ஒன்றை சொல்லவேண்டி வரும் என்பதால் சினிமா செய்திகளையும் நிகழ்வுகளையும் மட்டுமே வெளியிடும். எந்த பிரச்சனையையும் இது போல தீர்வு காணலாம் என்ற ஒரு சின்ன யோசனையையும் கூட மக்கள் பிரச்சனைக்கோ, அரசியல் தவறுகளுக்கோ சொல்லாத நாளேடு.

தினமணி நான் அதிகம் படித்ததில்லை. ஆனால் படிப்பவர்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன். மாணவர்களுக்கு ஒரு பயனுள்ள நாளிதழ் என்றும், சினிமா கிசுகிசுக்களை நம்பி வியாபாரம் செய்யாத நாளிதழ் என்றும், மேலும் தினமணியின் வாசகர் பக்கத்தில் தங்கள் இதழின் மீது குறை சொல்லி வரும் கடிதங்களை கூட பிரசுரிக்கும் அளவுக்கு தைரியம் உள்ள இதழ் என்றும். கருணாநிதி அவர்களே இதை நடுநிலை என்ற பெயரில் எங்கள் மீது மட்டும் குற்றம்...................Etc என்று சொல்லும் அளவுக்கு ஆளும் கட்சியாக இருக்கும் போதே தலையங்கம் எழுதும் ஏடு.

தினகரன் ஒரு ரூபாய்க்கு விற்பனையை ஆரம்பித்த போதே கட்சி சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாளேடு. தங்கள் அலுவலகம் எரிக்கப்பட்டவுடன் கொதித்தெழுந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நியாயம் வாங்கித்தருவேன் என்று சொல்லி குடும்பம் ஒன்று சேர்ந்த உடன் அதை பற்றி கவலைபடாத நாளிதழ். அந்த சம்பவத்திற்கு பின்பு அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறி அவர்களின் நம்பிக்கை துரோகத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர்களின் குடும்ப பொருளாதார நிலை அதைபற்றி எல்லாம் நினைப்பதற்கு அவர்களை தூண்டவில்லை. இந்திய நடுத்தர மக்களின் பொருளாதார ஏற்றமின்மை என்பது நம் நாட்டின் ( நேர்மையற்ற அரசியல் கட்சிகளாலும், சுய கட்டுப்பாடற்ற சமகால மக்களாலும் ஏற்பட்ட நிரந்தரமான ? ) சாபக்கேடு.

தினமலர் - ?

இந்த நாளிதழை சமீப காலமாகவே படிக்க ஆரம்பித்தேன். இது கட்சி சார்ந்த பத்திரிக்கையா? நாட்டின் வளர்ச்சி மேல் அக்கறை உள்ள பத்திரிக்கையா? தனி மனிதர்கள் மீது கோபம் இல்லாத பத்திரிக்கையா? புலானாய்வு இதழா? சினிமா கிசுகிசுக்களை நம்பி தொழில் செய்யாத நாளேடா? தன் தனிப்பட்ட குறிக்கோள்களை, எண்ணங்களை மக்கள் மீது திணிக்காத இதழா? இது எதுவுமே எனக்கு தெரியாது.

தினமலரின் சில செய்திகளை அப்படியே உங்களுக்கு கொடுத்து இருக்கின்றேன். பாருங்கள். அதன் சாரம்சத்தை பற்றி மட்டும் கொஞ்சம் விளக்கி சொல்ல வேண்டியது அவசியமாகின்றது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுக விலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் எவ்வளவு special news, கட்டுரைகள் , பிளாஷ் செய்திகள்? அவர்கள் செய்த சட்ட விரோத செயல்கள், அதிமுக விற்கு செய்த துரோகங்கள், மக்களை மிரட்டியது, கட்ட பஞ்சாயத்து செய்தது என்று எழுதியது. இதன் எல்லாவற்றிலும் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு வகையில் முதல்வரின் பங்களிப்பு இருந்திருக்கும் தானே? அதை பற்றி ஏன் பக்கம் பக்கமாக எழுதவில்லை? அவர்கள் முதல்வரின் பக்கத்தில் இருந்த போது இதை போல எத்தனை கட்டுரை வெளிவந்திருக்கின்றது மலரில்? சசிகலா குடும்பத்தினர் முதல், அமைச்சர்கள் வரை இன்று வரை ஏன் மாற்றப்பட்டு வருகின்றார்கள்? எது தான் உண்மை ? அமைச்சர்களுக்கு போதுமான திறமை இல்லை என்பதற்காக மாற்றப்பட்டார்கள் என்றால், திறமை இல்லாதவர்களுக்கு எதற்கு முதலில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது? அவ்வளவு ஏன், முதலில் ஏன் அவர்களுக்கு MLA பதவி? இதை பற்றி எத்தனை கட்டுரை வெளிவந்துள்ளது தினமலரில்?

அரசு போக்குவரத்து கழகத்தின் பயண சீட்டு விலையேற்றத்தை பற்றிய கட்டுரையில் “ ஒரே நாளில் இந்தளவு விலை உயர்வு என்றதும் பஸ் பயணம் வேண்டாம், சைக்கிள் பயணம் போதும் என்று பேசலாம் ஆனால் இது காலப்போக்கில் மாறிவிடும்” என்று எழுதப்பட்டு இருந்தது. காரணம் பத்துவருடமாக விலையேற்றம் செய்யப்படவில்லை என்கின்றது. முன்னாள் முதல்வர் “deluxe பேருந்து விட்ட போது இதே போல வக்காலத்து வாங்கியதா” என்று தொடர்ந்து மலரை படிப்பவர்கள் சொல்லட்டும்

இது ஏதோ ஒரு வகையில் மக்களின் போராட்ட குணத்தை மழுங்கடிப்பதாக இல்லையா? இல்லை என்பவர்கள் அடுத்த செய்தியை பாருங்கள்.

கூடங்குள எதிர்ப்பு போராட்டத்திற்கு சுயநல கும்பலே காரணம் . இது பெரிதாக Bold எழுத்திலும், கட்டுரையின் முடிவின் செய்தியில் மேலே சொன்ன வாசகங்களின் பின்னே “என்று அணுமின் கழக ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள்” என்று போடப்பட்டு இருக்கும். இதன் உள்ளர்த்தம் என்ன? தலைப்பை படிப்பவர்களுக்கு போராட்டக்காரர்களை பற்றிய தவறான எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதுதானே? உதயகுமாரன் வெளிநாட்டின் பணத்துக்காக இந்த அணு உலையை எதிர்கின்றார் என்று அரசு சொல்வதை பெரிதாக வெளியிடும் நாளேடு “உதயகுமாரன் சொல்லும் முன் உதாரண அழிவுகளை அதே போல அணு உலையால் அழியும் நகரம்” என்று வெளியிடுமா? அப்படி வெளியிடுமேயானால் நடுநிலை என்று சொல்லலாம். உதயா ஈடுபடுவது வெளிநாட்டு சதி என்னும் அரசு, அப்புறம் எதற்கு உளவுத்துறையையும், CBI போன்ற அமைப்புகளை நடத்த வேண்டும்? ஊழலை எதிர்த்து போராட்டம் என்ற உடன் சாமியார்களின் சொத்துக்கணக்கை பார்க்கவா?

இன்னொரு செய்தியில் போராட்டக்காரர்களின் மின் அஞ்சல் முகவரியையும், கை பேசி என்னையும் கொடுத்து கட்டுரை வெளியிட்டு இருக்கின்றது. அப்படியானால் மலரின் எதிர்பார்ப்பு என்ன? தேவையற்ற அழைப்புகளை கொடுத்து அவர்களின் குடும்ப நிம்மதியை கெடுக்க நினைப்பவர்கள் அல்லவா இவர்கள்? அவரின் கை பேசி என்னை தருபவர்கள் தினமலரில் கட்டுரை எழுதும், முக்கிய நிர்வாகத்தில் இருக்கும் நபர்களின் சுய பயன்பாடு கொண்ட கைப்பேசி என்னை அச்சடிப்பார்களா ?

இதுவும் போராட்ட குணத்தை குறை சொல்ல தானே? சரி இது நம் நாடும் , இந்த மலரும் சொல்வது போல வெளி நாட்டு சதியாகவே இருக்கட்டும். அதனால் மக்களை காப்பாற்றி நல்வழிப்படுத்தும் தேவ தூதராக மலர் இருக்கட்டும் என்று பார்த்தால் ஒரு கார்ட்டுன் படத்தில் “சுத்தி அரிவாள் சின்னம் வைத்த ஒரு அலுவலகத்தில் இரண்டு பேர் பேசுகின்றார்கள் “ என்னய்யா இப்படி பெட்ரோல் விலையை குறைசிட்டாங்களே ? ஏத்தனா தானே நம்ம அதுக்காக போராட்டம் நடத்தி நாம ஒரு கட்சி நடத்தறோங்கிரத்தை மக்களுக்கு ஞாபகம் படுத்த முடியும்?” மற்ற நாடுகளில் குறைந்த விலையில் விற்பனையாகும் பெட்ரோல் இங்கே ஏன் அதிக விலை என்று கேட்டு போராட்டம் நடத்துவது எவ்வளவு பெரிய நகைச்சுவை மலருக்கு? மற்ற நாடுகளில் அதிக விலைக்கு விற்கும் பொருள் இங்கே குறைந்த விலையில் கிடைக்கின்றதே அதை ஏன் பார்க்கவில்லை என்று சிலர் கேட்கலாம். அப்படி பார்த்தால் நம் மக்களுக்கு அரசு தரவேண்டிய “கல்வி, மருத்துவம்” போன்றவை என்ன விலை? இவ்வாறாக எல்லாவற்றையும் ஒப்பீட்டு பார்த்தால் நம் நாட்டை நினைத்து முன் சொன்ன மலரின் நகைச்சுவையை போல நாம் சிரிக்க வேண்டி வரும் வெட்கம் கெட்டு.

சினிமா செய்தியில் (வலைத்தளத்தில்) படித்த ஒரு விஷயம். திருட்டு கதையில் குள்ள நடிகர். படித்தால் உங்களுக்கே தெரியும் இது சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தை பற்றி என்று. செய்தியில் சொல்லப்படுவது “ இந்த கதை ஒரு உதவி இயக்குனருடையது, அதை திருடி இவர்கள் எடுத்துவிட்டார்கள்” என்பதுதான். அந்த உதவி இயக்குனரை அறிமுகப்படுத்தி அவரின் பேட்டியை போட்டு இருக்கலாம். முருகதாஸை நேரடியாக மலரால் கேட்க முடியாதா? ஒரு இயக்குனர் (திருடியோ அல்லது சொந்தமாக யோசித்தோ) சொன்ன கதையில் ஒரு நடிகர் நடித்து உள்ளார். அதில் எங்கிருந்து வந்தது நடிகரின் தவறு? திருடி படம் எடுத்த இயக்குனர் என்று செய்தி வெளியிடுவதுதானே நியாயம்? இந்த செய்தியில் உள்ள குள்ள என்ற வார்த்தையை எவ்வளவு வக்கிரம் இருந்தால் பயன்படுத்தி இருப்பார்கள்? இந்த பத்திரிகையில் வேலை செய்பவர்கள் எல்லாம் ஆறடி மனிதர்களா? இல்லை அவர்களின் பயோ-டேட்டாவை உயரம் மற்றும் எடையுடன் மலரிலேயே வெளியிடட்டுமே, நாம் தெரிந்து கொள்வோம். உயரத்தை பற்றி பேசுவதற்கும் ஊனத்தை பற்றி பேசுவதற்கும் என்ன பெரிய வித்தியாசம்? இவர்கள் வீட்டில் இருப்பவர்கள் வெளியில் இருப்பவர்கள் இது போல அழைத்தால் பெருமிதம் கொள்வார்களோ? ஒரு செய்திக்காக சூர்யா இவர்களை நாகரீகமற்று திட்டி இருந்தால் நாங்களும் இது போலத்தான் நாகரீகமின்றி பதிலுக்கு திட்டுவோம் என்று தனிப்பட்ட விசயங்களை பேசும் மலர் எப்படி ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்திற்கான பத்திரிக்கையாக இருக்க முடியும்? (எங்கேயோ ஒரு வலைப்பதிவில் யாரோ எழுதி இருந்தது ஞாபகம் வருகின்றது “ தின மலர் அல்ல தின மலம் என்று” – மலரைப்போலவே அவரும் பேசி இருக்கின்றார் ஏதோ ஒரு தனிப்பட்ட கோபத்தோடு)

கடைசியாக இன விடுதலைக்காக போரடி தூக்கு தண்டனை பெற்றவர்களையும், ஓடும் ரயிலிலிருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி அவளை கொடூரமாக கற்பழித்து கொன்று மரண தண்டனை பெற்றவனையும் ஒன்று என்பது போல் செய்தி வெளியிட்டு மலர் அடைந்த புலங்காங்கிதத்தை என்ன வென்று சொல்லுவது?

தினமலரின் ஆன்-லைன் பக்கம் சென்று, படிப்பவர்களின் comments ஐ பாருங்கள். உன் நண்பனை பற்றி சொல்.உன்னை பற்றி நான் சொல்கின்றேன் என்ற வாசகம் நினைவில் வரும்.

தினமலரின் முன்னோடிகளும், அதை ஆரம்பித்து வைத்துச்சென்றவர்களும் ஆன்மாவாக இருந்து தற்போது வெளிவரும் தினமலரை பார்த்துக் கொண்டிருகின்றார்கள் என்பதை ஆன்மீக கட்டுரை வெளியிடும் தினமலர் நிர்வாகிகள் நினைவில் கொள்ளட்டும்.

தினமலர் உண்மையின் உரைகல்லாவதும் கறைகல்லாவதும் அதை வழி நடத்துபவர்களின் கைகளில்.


ஏதோ ஒரு வகையில் பெரும்பாலும் எல்லா பத்திரிக்கைகளும் (இது போன்ற வலைப்பூ உள்பட) அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவே செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. நான் உள்பட...!


தங்கள் கருத்துக்கள் post comments இல் பதிவு செய்யவும்.