Thursday, June 23, 2011

நடிகர்கள் என்னும் அட்டை பூச்சிகள்


இளைஞர்களின் எழுச்சி தீபமே, புரட்சி நாயகனே, ஒளி விளக்கி , மாணிக்கமே, தன்மான தமிழனே,.... இப்படியே ஊருக்கு ஊர் வித்தியாசமான தலைப்பு போட்ட சுவரொட்டிகள் எங்களின் தலை நகரை அழகு படுத்திக்கொண்டு இருந்ததை பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது ரசித்துக்கொண்டு இருந்தேன். நடிகனின் பிறந்த நாள் அன்று. நான் சென்று இறங்கிய அந்த ஊர் ஒரு பேட்டை. பேருந்து நிலையத்திற்கு அருகில் இரண்டு பெரிய ஒலிபெருக்கிகள். அந்த நடிகர் இந்தியாவை ஒரு நடிகைக்கும் அவரின் உடல் பாகங்களுக்கும் சொத்து பிரித்து எழுதிவைக்கும் பாடல். சத்தம் தரும் இன்பம் காரணமாக காத்திருக்கும் பயணிகள் எல்லாம் நிலையத்தை விட்டு 50 மீட்டர் தூரம் சென்று நின்றிருந்தார்கள். தோரணங்கள் தெருவில் குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டு இருப்பதால் அது தந்த நிழலில் நடந்து சென்றேன்.

தெரு முடிவில் ஒரு அங்கன்வாடி மையம். அதன் அருகில் உள்ள வேப்பமரம் தான் இந்த ஒலிபெருக்கிகள் செயல்படும் மையம். அங்கன்வாடிக்கு நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கின்றேன். ஒரு 10 எதிர்கால இந்தியாக்கள் வாடகைக்கு எடுத்து வந்திருக்கும் நாற்காலிகளில் அமர்ந்திருக்க, ஒரு 3 இந்தியாக்கள் (பள்ளியில் படித்துக்கொண்டு இருப்பவர்களாகவோ அல்லது பள்ளி படிப்பை கை விட்டவர்களாகவோ இருக்க வேண்டும்) எதிர் எதிரில் நின்று சட்டையை தூக்கி தொப்புள் தெரியும் படி காட்டி, இடுப்பை மட்டும் முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொண்டு இருந்தார்கள். அருகே அந்த எதிர்கால இந்தியாக்களின் புகைப்படம் சேர்த்து அந்த நடிகரின் ரண கோபமான ஒரு புகைப்படம், வேஷ்டி கட்டிக்கொண்டு சிரிப்பது போல ஒரு புகைப்படம் என்று அழகாக வரைகலை செய்யப்பட்ட நீண்ட நெடிய பேனர் ஒன்றும், கல்யாண சாப்பாட்டில் தலை வாழை இலையில் சுற்றி வைக்கப்படும் பதார்த்தங்களை போல அருகில் இன்னும் பல சிறிய பேனர்களும் கொம்புகள் தேடி பிடித்து, மண்ணை நோண்டி நட்டு அதில் காற்றில் ஆடா வண்ணம் கயிறு கொண்டு கட்டப்பட்டு இருந்தது. அந்த நடிகரின் படம் பொறித்த கொடி தெருவின் இருபுறமும் ஆடிக்கொண்டு இருந்தது. அங்கேயும் இரண்டு ஒலி பெருக்கிகள்.

அந்த தெருவையும் கடந்த பின்பு அடுத்த தெருவின் ஆரம்பத்தில் இடது புறம் வரிசையாக நடப்பட்ட கொம்புகளுக்கு குழல் விளக்கை பொருத்திக்கொண்டு இருந்தான் இன்னொரு இந்தியா. அதே தெருவில் வலது புறம் சீர் செய்யப்படாத தேங்கி நிற்கும் கழிவு நீர் கால்வாயும் அதிலிருந்து தான் தோன்றி போல வெளிவந்த குடிநீர் குழாய் பழுப்பும் இருந்தது. சிறிது தூரத்தில் குடத்தில் நிரம்பிய நீர் வழிந்து அதன் அடி பக்கத்தை அடையும் இடம் கருப்பு நீராகி கொண்டு இருந்தது கழிவு நீர் தேங்கி நிற்பதால். அந்த தெரு முடிவில் மீண்டும் இரண்டு ஒலி பெருக்கிகள். அடுத்த பாடல் ஆரம்பித்தது. ஒரு அங்குல இரண்டு அங்குல மூன்று அங்குல இடைவெளி ஏண்டி என்று கூட ஆடும் நடிகையை பார்த்து கேட்பது போல தொடங்கும் பாடல் மீண்டும் கிடைத்த இரண்டு நொடி அமைதியை சாவடிக்க சத்தமாக கிளம்பியது.

சந்திக்க சென்ற நபரை சந்தித்தேன். அவர் ஒரு வரைகலை நிபுணர். அவரிடம் இன்னொரு எதிர்கால இந்தியா ஏதோ கேட்டுக்கொண்டு இறந்தார். அவர் பேசி முடித்து சென்ற உடன் நானும் அவரும் உரையாடும் போது தற்செயலாக முன் சென்ற இளைஞன் கேட்ட தகவலை பற்றி சொன்னார். ஒரு நாளிதழில் அந்த நடிகனின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியை பிரசுரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டானம். பதில் குறைந்த பட்சம் 7000 ரூபாய் (அந்த மாவட்டத்திற்கான பதிப்பில் மட்டும் வெளியிட ). அப்படியே மற்ற செலவுகளை பற்றிய விபரங்களை பற்றியும் கேட்டேன். நாம் பார்க்கும் சாதாரண வண்ண சுவரொட்டி 100 விலை 1000 ரூபாய் வரைகலையும் சேர்த்து. பேனர் ஒன்ற 10 க்கு 5 இன் விலை 500. சுற்றி வைக்கப்படும் மரம் அல்லது இரும்பு பிரேம் விலை தனி. கொடி ? ஒலி பெருக்கி? விளக்குகள்? சாமியான பந்தல்?

நடிகனின் படம் வெளி வரும் காசு கொடுத்து பேனர் வைப்போம். காசு கொடுத்து சுவரொட்டி ஓட்டுவோம். காசு கொடுத்து திரையரங்குக்கு செல்வோம். காசு கொடுத்து நண்பர்களை அழைத்து செல்வோம். படம் நன்றாக இருந்தால் ஒரு நாளுக்கு 10 முறையாவது பெருமை பட்டுகொள்வோம். நன்றாக இல்லையென்றால் ஒரு வாரமாவது வருத்தப்பட்டு கொண்டு இருப்போம். எப்படியாவது அடுத்த படம் 100 ஓட வேண்டும் என்று காசு கொடுத்து பூஜை செய்வோம். காசு கொடுத்து மொட்டை அடிப்போம். காசு கொடுத்து பால் வாங்கி நடிகர்களின் படங்களுக்கு அபிசேகம் செய்வோம். காசு கொடுத்து திரையரங்கில் தோரணம் கட்டுவோம். படம் 100 நாள் ஓடும். அதன் காரணமாக நடிகரின் அடுத்த படத்தின் சம்பளம் உயரும். அடுத்த படத்தின் திரையரங்க நுழைவு சீட்டின் விலையும் உயரும். அதையும் அதே போல காசு கொடுத்து பார்ப்போம். பெருமைபட்டு கொள்வோம்.

நடிகரின் சார்பில் உரிமையை மீட்க மாநாடு நடக்கும். காசு கொடுத்து வாடைகைக்கு வண்டி வைத்து போவோம். எந்த உரிமை மீட்க என்று நமக்கு தெரியாது இருந்தாலும் கூட இருப்பவர்களையும் அள்ளிபோட்டு கொண்டு அவர்களுக்கு சாப்பாடு காசு கொடுத்து வாங்கி கொடுத்து, வரும்போது மதுவை கொடுத்து கூட்டி வருவோம். அவரின் வீர கர்ஜனையை ஆவேசமாக கேட்போம். வரும் போது வண்டியில் கத்திக்கொண்டு வருவோம். மறுநாள் தொண்டைகட்டிய பின்பு காசு கொடுத்து மருந்து உட்கொள்வோம். அடுத்த படத்திற்கு காத்திருப்போம். அந்த படத்திற்க்கான நுழைவு சீட்டின் விலை அதிகரித்து இருக்கும். காரணம் அந்த உரிமை மீட்பு மாநாட்டிற்கு வந்த நம் போன்றவர்களின் எண்ணிக்கைக்காக அதிகமானதிற்கு நடிகன் நமக்கு தரும் பரிசு அல்லது கைமாறு.

இது போன்ற செலவு செய்வதற்கு பதில் ஏதாவது நல்லா காரியம் செய்யலாம் அல்லவா என்று கேட்டால், ஏன் செய்கின்றோமே " இல்லாதவர்களுக்கு உணவு தருகின்றோம், மாணவர்களுக்கு பலகைகள் தருகின்றோம்," என்று பட்டியல் நீளுகின்றது. 25 குழந்தைகளுக்கு பலகை தர ஏற்ப்பாடு செய்யப்படும் விழாவிற்கு மேடைக்கு மட்டும் ஆகும் செலவு 14000 ரூபாய். எல்லா விழாவும் இப்படித்தான் போகின்றது. நாம் நம் ரத்தத்தை நம் மக்களுக்கு தானம் செய்ய நடிகனின் பிறந்தநாள் வரும் வரை ஏன் காத்திருக்கின்றோம்? நாம் தானம் செய்வதை அந்த நடிகர் தானம் செய்கின்றாரா?

திரும்பி வரும் போது "நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ் நாட்டை உயர்திடனும்" என்ற வரிகள் காதில் விழுந்தது. அந்த நடிகனின் மகன் தாய் மொழியில் இந்நேரம் கல்வி கற்று கொண்டு இருப்பாரா? அல்லது அந்த நடிகர் தான் தாய் மொழிக்கல்வியில் பள்ளி கல்லூரிகளில் படித்து இருப்பாரா?

பேருந்தில் வரும் போது எல்லா ஊர்களிலும் இதே போல தை மாதம் பயிர் நட்டு மாசி மாதம் களை எடுத்து பங்குனியில் அறுவடை முடித்து சித்திரை பௌர்ணமி இரவில் களைப்பை தீர்க்க நம் விவசாய மக்கள் நிலவொளியில் கொண்டாடும் கொண்டாட்டங்கள் போல வீதி எங்கும் எதிர்கால இந்தியாக்களின் கொண்டாட்டங்கள்..! முடியும் இடம் நிச்சயம் அரசாங்க மலிவு விலை மது கடையாகத்தானே இருக்கும்?

இதை எல்லாம் எண்ணி மனம் நொந்து கொண்டு இருக்கும் போது ஏனோ கீழ்கண்ட பாழாய் போன வரிகள் நினைவில் வந்து சென்றது.

"இந்தியா ஒளிர்கின்றது"

தண்டோரா: உங்கள் நாய்ழகனை மன்னிக்கவும் நாயகனை நான் குறை சொல்லிவிட்டதால் கோபம் கொண்டு என்னை திட்ட நினைப்பவர்கள் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தவும். அதை தான் உங்கள் நாயகரும் உங்களுக்கு கட்டளையாக இட்டு இருப்பார் என்று நினைக்கின்றேன்.

6 comments:

Anonymous said...

yaen pa yenga thalapathy mela avalavvu veruppu . therinjadha neenga solliteenga avaru theriyama ennanamo seithitirrukaru

Indu mathy said...

Idhai padithu vittavadhu manam maarinaal sari magizhchi dhan

Indu mathy said...

Idhai padithu vitaavadhu manam maarinaal sari magizhchi dhaan

உங்களுள் ஒருவன் said...

நன்றாக சொன்னிங்க... அத நாளில் பிறந்த நாள் கொண்டாடின இன்னொரு டில்லி அரசியல்வாதியை பற்றி நான் ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன்.... நேரம் தான் இல்லை.... சரி பிழைத்து போகட்டும் என்று விட்டு விட்டேன்...

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்....!

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்....!