Friday, June 24, 2011

மல்டிமீடியா (MULTIMEDIA) படிக்க ஆசையா?

இன்றைய நவீன யுகத்தில் கணினி என்பது தவிர்க்........ ஸ்.....! நேராக மல்டிமீடியா பற்றிய விசயத்திற்கு வரேன்.

மல்டிமீடியா என்றால்?
மல்டி = பல : மீடியா = தொடர்பு கொள்ள உதவும் சாதனம் ?
நாம் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் எழுத்து
(Text), வரைபடம் (Image), சப்தம் (sound), & காணொளி (Video) ஆகியவை சேர்ந்த கலவை இந்த மல்டிமீடியா. இதன் சம்பந்தமான மென்பொருட்கள் பற்றிய அறிவு, பல தனியார் கல்வி நிறுவனங்களில் மல்டிமீடியா என்ற பிரிவில் கற்றுத்தரப்படுகின்றது. அங்கு சென்று படிக்கும் எண்ணம் இருந்தால் இந்த பதிவு நிச்சயம் பயன்படும். இல்லையென்றால் ஒரு பொது அறிவை வளர்த்துக்கவாவது படிங்க.



பிரிவுகள்?

முன் சொன்னது போல
4 பிரிவுகளை (Text, Image, Audio, Video) அடிப்படையாக கொண்டு இந்த படிப்பு வகைப்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான கல்வி நிறுவனங்களில்

1. Graphic Design (வரைகலை வடிவமைப்பு)
2. Web Design (வலைத்தள வடிவமைப்பு)
3. 2D Animation (இரு பரிமாண அசைவு ஊட்டம்)
4. 3D Animation (முப்பரிமாண அசைவு ஊட்டம்)
5. Audio & Video Editing (ஒலி & ஒளி தொகுப்பு)
6. Visual Effects (vfx)

ஆகிய படிப்புகளே பிரதானம்.

1.Graphic Designing

மென்பொருட்கள் : PageMaker, CorelDraw, Adobe Indesign, Adobe Illustrator, Adobe Photoshop

கல்வி நிறுவனங்களை பொறுத்து இதில் ஏதாவது மூன்று மென்பொருட்களை மட்டுமே இந்த வரைகலை வடிவமைப்பு பகுதியில் சொல்லி கொடுக்கின்றார்கள். இந்த மென்பொருட்களில் போடோஷாப் மிக முக்கியமானது. காரணம் புகைப்பட துறையில் இதை மிக அதிகமாக பயன்படுத்துகிறார்கள். கீழ்மட்ட DTP (Desktop publishing) சிறுகடைகள் முதல் பெரிய IT நிறுவனங்கள் வரை பயன்படுத்துகின்றார்கள். எனவே எல்லா நிறுவனங்களிலும் போட்டோஷாப் தவிக்க முடியாமல் பயிற்றுவிக்கப்படுகின்றது. பேஜ்மேக்கர் அழைப்பிதழ் வரைகலை செய்யப்படும் துறைகளில் கட்டாயம் தேவைப்படுகின்றது. ஆனால் இதை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் சொல்லிகொடுப்பதில்லை. CorelDraw & Illustrator வேலை செய்யும் முறை ஒன்றுதான் (vector graphics software), ஆனால் கருவிகளும் பயன்படுத்தும் வழிமுறைகளும் வேறு. Illustrator பெரும்பாலும் பன்னாட்டு வேலைகளை செய்து கொடுக்கும் நிறுவனங்களிலும், CorelDraw உள்நாட்டு வேலைகளை செய்யும் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. In design & quark express போன்ற மென்பொருட்கள் பத்திரிக்கை துறைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

பயன்பாடுகள்:
நாம் பார்க்கும் அசையாவண்ணம் உள்ள அனைத்து எழுத்து மற்றும் படங்கள் கொண்ட, பேருந்து பயணச்சீட்டு முதல் பெரிய பெரிய சுவரொட்டி, வண்ண பதாகை (Banner) வரை எல்லாம் இந்த மேற்கண்ட ஏதோ சில மென்பொருட்களை பயன்படித்தியே வரைகலை செய்யப்பட்டு இருக்கும்.

வேலை வாய்ப்பு ?
கல்விநிறுவனங்களில் சேரும் போதே அந்த கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு (
placement assistance) சரியான முறையில் தங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்துகொண்டு பணம் கட்டுவது நல்லது. அதோடு நில்லாமல் அங்கு படித்து வேலை வாய்ப்பு பெற்ற நபர்களின் பெயர் மற்றும் கைப்பேசி எண்ணை நிர்வாகத்திடமிருந்து வாங்கி அவர்களிடம் உறுதி செய்துகொள்ளவும். மேலும் அங்கு படிக்கும் மாணவர்களில் யாரைவது சிலரை வெளியில் தனித்தனியாக சந்தித்து அங்கு சரியான முறையில் பாடம் சொல்லிக்கொடுக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்துகொள்ளவும். அதிக கட்டணம் வாங்கும் இடத்தில் நல்ல தரமான கல்வி கிடைக்கும் என்று நம்ப வேண்டாம். கட்டணத்திற்கும் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆசிரியர்களை பொறுத்தே கல்வியின் தரம் இருக்கும். இந்த துறையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேகமாக தட்டச்சு செய்வதும் (type writing), அடிப்படை வண்ணங்களை (color sense) பற்றிய அறிவும், குறைந்த பட்ச வரையும் திறனும்(drawing) முக்கியம். இதில் குறைந்தபட்சம் ஆங்கிலம் மட்டுமாவது வேகமாக தட்டச்சு செய்ய கற்றுக்கொள்ளவும்.

சிறு கடைகளில் (
10th) 4000 ரூபாய் சம்பளமும், பெரிய நிறுவனங்களில் (degree must) 8000 ரூபாய் சம்பளமும் ஆரம்பத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. லட்ச லட்சமாக சம்பாதிக்க உடனே வாங்க என்று அழைக்கும் கல்வி நிறுவனங்களை நம்ப வேண்டாம். அனுபவம் இல்லாத நிலையில் பெரிய நிறுவனங்களில் வேலையில் சேர நிச்சயம் நமக்கு ஒரு ஆள் அந்த நிறுவனத்தில் இருந்து உதவி (recommendation) செய்ய வேண்டி இருக்கும்.

போதுமான வருமானமும் கணிணித்துறையில் வேலைசெய்துகொண்டு இருக்கின்றேன் என்ற மன திருப்பதியும் கிடைக்க, அதிக கல்வி வாய்ப்பு பெற முடியாது என்ற நிலையில் உள்ள அடித்தட்டு மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு இந்த துறை ஒரு நல்ல ஆரம்பம்.

வலைத்தள வடிவமைப்பு பற்றிய பதிவில் மீண்டும் சந்திப்போம்.

CSC குறைந்த கட்டணத்தில் அடிப்படை கல்வியையும், IMAGE அதிக கட்டணத்தில் நல்ல வேலை வாய்ப்பையும் தருகின்றது என்று கேள்வி பட்டு இருக்கின்றேன். எங்கு சேர்ந்தாலும் சுயமாக கற்றுக்கொள்ள தங்கள் திறனை வளர்த்துக்கொள்வது நல்லது.

Thursday, June 23, 2011

நடிகர்கள் என்னும் அட்டை பூச்சிகள்


இளைஞர்களின் எழுச்சி தீபமே, புரட்சி நாயகனே, ஒளி விளக்கி , மாணிக்கமே, தன்மான தமிழனே,.... இப்படியே ஊருக்கு ஊர் வித்தியாசமான தலைப்பு போட்ட சுவரொட்டிகள் எங்களின் தலை நகரை அழகு படுத்திக்கொண்டு இருந்ததை பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது ரசித்துக்கொண்டு இருந்தேன். நடிகனின் பிறந்த நாள் அன்று. நான் சென்று இறங்கிய அந்த ஊர் ஒரு பேட்டை. பேருந்து நிலையத்திற்கு அருகில் இரண்டு பெரிய ஒலிபெருக்கிகள். அந்த நடிகர் இந்தியாவை ஒரு நடிகைக்கும் அவரின் உடல் பாகங்களுக்கும் சொத்து பிரித்து எழுதிவைக்கும் பாடல். சத்தம் தரும் இன்பம் காரணமாக காத்திருக்கும் பயணிகள் எல்லாம் நிலையத்தை விட்டு 50 மீட்டர் தூரம் சென்று நின்றிருந்தார்கள். தோரணங்கள் தெருவில் குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டு இருப்பதால் அது தந்த நிழலில் நடந்து சென்றேன்.

தெரு முடிவில் ஒரு அங்கன்வாடி மையம். அதன் அருகில் உள்ள வேப்பமரம் தான் இந்த ஒலிபெருக்கிகள் செயல்படும் மையம். அங்கன்வாடிக்கு நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கின்றேன். ஒரு 10 எதிர்கால இந்தியாக்கள் வாடகைக்கு எடுத்து வந்திருக்கும் நாற்காலிகளில் அமர்ந்திருக்க, ஒரு 3 இந்தியாக்கள் (பள்ளியில் படித்துக்கொண்டு இருப்பவர்களாகவோ அல்லது பள்ளி படிப்பை கை விட்டவர்களாகவோ இருக்க வேண்டும்) எதிர் எதிரில் நின்று சட்டையை தூக்கி தொப்புள் தெரியும் படி காட்டி, இடுப்பை மட்டும் முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொண்டு இருந்தார்கள். அருகே அந்த எதிர்கால இந்தியாக்களின் புகைப்படம் சேர்த்து அந்த நடிகரின் ரண கோபமான ஒரு புகைப்படம், வேஷ்டி கட்டிக்கொண்டு சிரிப்பது போல ஒரு புகைப்படம் என்று அழகாக வரைகலை செய்யப்பட்ட நீண்ட நெடிய பேனர் ஒன்றும், கல்யாண சாப்பாட்டில் தலை வாழை இலையில் சுற்றி வைக்கப்படும் பதார்த்தங்களை போல அருகில் இன்னும் பல சிறிய பேனர்களும் கொம்புகள் தேடி பிடித்து, மண்ணை நோண்டி நட்டு அதில் காற்றில் ஆடா வண்ணம் கயிறு கொண்டு கட்டப்பட்டு இருந்தது. அந்த நடிகரின் படம் பொறித்த கொடி தெருவின் இருபுறமும் ஆடிக்கொண்டு இருந்தது. அங்கேயும் இரண்டு ஒலி பெருக்கிகள்.

அந்த தெருவையும் கடந்த பின்பு அடுத்த தெருவின் ஆரம்பத்தில் இடது புறம் வரிசையாக நடப்பட்ட கொம்புகளுக்கு குழல் விளக்கை பொருத்திக்கொண்டு இருந்தான் இன்னொரு இந்தியா. அதே தெருவில் வலது புறம் சீர் செய்யப்படாத தேங்கி நிற்கும் கழிவு நீர் கால்வாயும் அதிலிருந்து தான் தோன்றி போல வெளிவந்த குடிநீர் குழாய் பழுப்பும் இருந்தது. சிறிது தூரத்தில் குடத்தில் நிரம்பிய நீர் வழிந்து அதன் அடி பக்கத்தை அடையும் இடம் கருப்பு நீராகி கொண்டு இருந்தது கழிவு நீர் தேங்கி நிற்பதால். அந்த தெரு முடிவில் மீண்டும் இரண்டு ஒலி பெருக்கிகள். அடுத்த பாடல் ஆரம்பித்தது. ஒரு அங்குல இரண்டு அங்குல மூன்று அங்குல இடைவெளி ஏண்டி என்று கூட ஆடும் நடிகையை பார்த்து கேட்பது போல தொடங்கும் பாடல் மீண்டும் கிடைத்த இரண்டு நொடி அமைதியை சாவடிக்க சத்தமாக கிளம்பியது.

சந்திக்க சென்ற நபரை சந்தித்தேன். அவர் ஒரு வரைகலை நிபுணர். அவரிடம் இன்னொரு எதிர்கால இந்தியா ஏதோ கேட்டுக்கொண்டு இறந்தார். அவர் பேசி முடித்து சென்ற உடன் நானும் அவரும் உரையாடும் போது தற்செயலாக முன் சென்ற இளைஞன் கேட்ட தகவலை பற்றி சொன்னார். ஒரு நாளிதழில் அந்த நடிகனின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியை பிரசுரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டானம். பதில் குறைந்த பட்சம் 7000 ரூபாய் (அந்த மாவட்டத்திற்கான பதிப்பில் மட்டும் வெளியிட ). அப்படியே மற்ற செலவுகளை பற்றிய விபரங்களை பற்றியும் கேட்டேன். நாம் பார்க்கும் சாதாரண வண்ண சுவரொட்டி 100 விலை 1000 ரூபாய் வரைகலையும் சேர்த்து. பேனர் ஒன்ற 10 க்கு 5 இன் விலை 500. சுற்றி வைக்கப்படும் மரம் அல்லது இரும்பு பிரேம் விலை தனி. கொடி ? ஒலி பெருக்கி? விளக்குகள்? சாமியான பந்தல்?

நடிகனின் படம் வெளி வரும் காசு கொடுத்து பேனர் வைப்போம். காசு கொடுத்து சுவரொட்டி ஓட்டுவோம். காசு கொடுத்து திரையரங்குக்கு செல்வோம். காசு கொடுத்து நண்பர்களை அழைத்து செல்வோம். படம் நன்றாக இருந்தால் ஒரு நாளுக்கு 10 முறையாவது பெருமை பட்டுகொள்வோம். நன்றாக இல்லையென்றால் ஒரு வாரமாவது வருத்தப்பட்டு கொண்டு இருப்போம். எப்படியாவது அடுத்த படம் 100 ஓட வேண்டும் என்று காசு கொடுத்து பூஜை செய்வோம். காசு கொடுத்து மொட்டை அடிப்போம். காசு கொடுத்து பால் வாங்கி நடிகர்களின் படங்களுக்கு அபிசேகம் செய்வோம். காசு கொடுத்து திரையரங்கில் தோரணம் கட்டுவோம். படம் 100 நாள் ஓடும். அதன் காரணமாக நடிகரின் அடுத்த படத்தின் சம்பளம் உயரும். அடுத்த படத்தின் திரையரங்க நுழைவு சீட்டின் விலையும் உயரும். அதையும் அதே போல காசு கொடுத்து பார்ப்போம். பெருமைபட்டு கொள்வோம்.

நடிகரின் சார்பில் உரிமையை மீட்க மாநாடு நடக்கும். காசு கொடுத்து வாடைகைக்கு வண்டி வைத்து போவோம். எந்த உரிமை மீட்க என்று நமக்கு தெரியாது இருந்தாலும் கூட இருப்பவர்களையும் அள்ளிபோட்டு கொண்டு அவர்களுக்கு சாப்பாடு காசு கொடுத்து வாங்கி கொடுத்து, வரும்போது மதுவை கொடுத்து கூட்டி வருவோம். அவரின் வீர கர்ஜனையை ஆவேசமாக கேட்போம். வரும் போது வண்டியில் கத்திக்கொண்டு வருவோம். மறுநாள் தொண்டைகட்டிய பின்பு காசு கொடுத்து மருந்து உட்கொள்வோம். அடுத்த படத்திற்கு காத்திருப்போம். அந்த படத்திற்க்கான நுழைவு சீட்டின் விலை அதிகரித்து இருக்கும். காரணம் அந்த உரிமை மீட்பு மாநாட்டிற்கு வந்த நம் போன்றவர்களின் எண்ணிக்கைக்காக அதிகமானதிற்கு நடிகன் நமக்கு தரும் பரிசு அல்லது கைமாறு.

இது போன்ற செலவு செய்வதற்கு பதில் ஏதாவது நல்லா காரியம் செய்யலாம் அல்லவா என்று கேட்டால், ஏன் செய்கின்றோமே " இல்லாதவர்களுக்கு உணவு தருகின்றோம், மாணவர்களுக்கு பலகைகள் தருகின்றோம்," என்று பட்டியல் நீளுகின்றது. 25 குழந்தைகளுக்கு பலகை தர ஏற்ப்பாடு செய்யப்படும் விழாவிற்கு மேடைக்கு மட்டும் ஆகும் செலவு 14000 ரூபாய். எல்லா விழாவும் இப்படித்தான் போகின்றது. நாம் நம் ரத்தத்தை நம் மக்களுக்கு தானம் செய்ய நடிகனின் பிறந்தநாள் வரும் வரை ஏன் காத்திருக்கின்றோம்? நாம் தானம் செய்வதை அந்த நடிகர் தானம் செய்கின்றாரா?

திரும்பி வரும் போது "நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ் நாட்டை உயர்திடனும்" என்ற வரிகள் காதில் விழுந்தது. அந்த நடிகனின் மகன் தாய் மொழியில் இந்நேரம் கல்வி கற்று கொண்டு இருப்பாரா? அல்லது அந்த நடிகர் தான் தாய் மொழிக்கல்வியில் பள்ளி கல்லூரிகளில் படித்து இருப்பாரா?

பேருந்தில் வரும் போது எல்லா ஊர்களிலும் இதே போல தை மாதம் பயிர் நட்டு மாசி மாதம் களை எடுத்து பங்குனியில் அறுவடை முடித்து சித்திரை பௌர்ணமி இரவில் களைப்பை தீர்க்க நம் விவசாய மக்கள் நிலவொளியில் கொண்டாடும் கொண்டாட்டங்கள் போல வீதி எங்கும் எதிர்கால இந்தியாக்களின் கொண்டாட்டங்கள்..! முடியும் இடம் நிச்சயம் அரசாங்க மலிவு விலை மது கடையாகத்தானே இருக்கும்?

இதை எல்லாம் எண்ணி மனம் நொந்து கொண்டு இருக்கும் போது ஏனோ கீழ்கண்ட பாழாய் போன வரிகள் நினைவில் வந்து சென்றது.

"இந்தியா ஒளிர்கின்றது"

தண்டோரா: உங்கள் நாய்ழகனை மன்னிக்கவும் நாயகனை நான் குறை சொல்லிவிட்டதால் கோபம் கொண்டு என்னை திட்ட நினைப்பவர்கள் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தவும். அதை தான் உங்கள் நாயகரும் உங்களுக்கு கட்டளையாக இட்டு இருப்பார் என்று நினைக்கின்றேன்.

Monday, June 20, 2011

Buried 2010 - 108 தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்

நம் வீட்டில் நாம் பார்க்காத நிறைய படங்கள் வைத்து இருப்போம். காரணம் நேரம் இல்லை, அல்லது அந்த படத்தின் போஸ்டர் அந்த அளவுக்கு நம்மை பார்க்க தூண்டாமல் இருக்கலாம். அப்படி என்னிடம் இருந்த 30 படங்களில் இதுவும் ஒன்று. சில படங்களை இணையத்தில் பார்த்தோ அல்லது கேள்வி பட்டோ தரவிறக்கம் செய்து அதை பார்த்த போது கடுப்பை தரும் படமாக இருக்கும் போது அறிமுகம் இல்லாத படங்களை தரவிறக்கம் செய்யவும் அப்படியே செய்தாலும் பார்க்கவும் ஒரு சின்ன பயம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் பல நேரங்களில் பல படங்களை கோபப்பட்டு shift+delete பொத்தான்களை அழுத்த வேண்டியதாகிறது. அல்லது சில படங்கள் நம்மை தூங்க வைக்க உதவுகின்றது.



Buried. படத்தின் கதை : ஒரு மர பெட்டிக்குள் வைத்து உயிரோடு புதைக்கப்பட்டவன் அதிலிருந்து தப்பிக்க போராடுவதுதான் கதை. கதைன்னு சொல்ல முடியாது. நிகழ்வுகள் அப்படினு சொல்லலாம்.

படத்தில் மொத்தம் காட்டப்படுவது இரண்டு முகம் . ஒரு பாம்பு. ஒரு பெட்டி. ஒரு லைட்டர் (தீ பற்ற வைக்க உதவும் தன்னியகமுடைய பொருள்). ஒரு டார்ச்(கைப்பந்த மின்விளக்கு). ஒரு செல்போன்(கைப்பேசி). ஒரு கத்தி. ஒரு ஒயின் டின். கொஞ்சம் மண்.

சத்தம் : மொத்தமா ஒரு 10 பேர் குரல். பின்னணி இசை. மண் சரியும் போன்ற சப்தங்கள்.

திரைக்கதை, படத்தொகுப்பு, ஒலி ஆகிய பிரிவுகளுக்கு 3 விருதுகளுடன், 2 மில்லியனுக்கும் குறைவான செலவில் எடுக்கப்பட்டு 20 மில்லியன் அளவுக்கு விற்ற படம்.


படத்துல செட் (கலை), கேமரா (ஒளிப்பதிவு), ஒரு தனி மனிதனின் நடிப்பு. பின்னணி இசை. எல்லாமே பக்கா. (அவ்ளோ தான் இருக்கு) கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.

இதெல்லாம் சரி. அது என்ன 108 தமிழ் இயக்குனர்கள் பார்க்க வேண்டிய படம்? சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பார்த்த போது , அதில் ஒருவர் சொன்ன புள்ளி விபரம் (கொஞ்சம் எண்ணிக்கைல கூடவோ குறையவோ இருக்கலாம்- அது என் தப்புதான்) என்னனா "கடந்த வருடம் 150 தமிழ் படங்கள் வெளிவந்து இருக்கு. அதுல 108 படங்கள் திரையரங்கில் ஒரு நாளோ ஒரு காட்சியோ தான் ஓடி இருக்கு. ஒரு படத்துக்கு சராசரியா 2.5 கோடி ரூபாய் செலவுன்னு பார்த்தாகூட கிட்ட தட்ட 250 கோடி ரூபாய் நஷ்டமாகி இருக்கும்" அப்படின்னு வருத்தமா சொன்னார். அதுல 90 சதவிகிதம் முழுக்க முழுக்க புது குழு (நடிப்பு & தொழில் நுட்பம்) அப்படின்னு கொசுறு தகவல்.

என்னை பொறுத்தவரை அந்த 108 இயக்குனர்களும் அவர்களது வேலையை சரியாக செய்யவில்லை. சில தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு தானே தயாரித்து நடிக்கவும் செய்தார்கள். சிலர் இயக்கம் செய்தார்கள். சிலர் புதுமுகமாக அறிமுகம் செய்ய காசு வாங்கி கொண்டு சிலரை நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். சிலர் கணக்கு காட்ட படம் எடுத்தார்கள். சிலர் படம் காட்ட படம் எடுத்தார்கள். மொத்தத்தில் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகொன்டர்கள். நிலைமை இதே போல போய்க்கொண்டு இருந்தால் குறைந்த முதலீட்டிற்க்கான கதையுடன் சுத்தி வருபவர்களை நல்லா படம் எடுக்க முயற்சி செய்யும் தயாரிப்பாளர்கள் கூட மனம் வந்து முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள்.

30 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரையிலான முதலீட்டுக்காக வித்தியாசமான திரைகதைகளுடன் எத்தனையோ பேர் கோடம்பாக்கத்தையும் வடபழநியையும் சுத்தி வந்தாலும் அவர்களை சீண்ட கூட ஆட்கள் இருப்பதில்லை. தனக்கு தெரிந்தவன் அல்லது துதி பாடுபவன் இவர்களுக்கு தான் முன்னுரிமை. அப்படி போகும் போது குறைந்த பட்சம் திரைக்கதைக்கான திட்டமிடலாவது தெரிந்து இருகின்றதா என்றால், நிச்சயம் இல்லை என்பதுதான் என் எண்ணம்.

இங்கே நான் சொல்லி இருக்கும் Buried திரைப்படம் அப்படியே தமிழில் எடுக்க சொல்லவில்லை. எடுத்தாலும் ஓடாது. இந்த அறிமுகம் வித்தியாசமாய் சிந்திக்கவும் அதை செயல்படுத்தவும் தான். குறைந்த பணத்தில் படம் எடுக்கும் போது இதை போன்ற சில படங்களை பார்த்தால் நிச்சயம் நம் மனமும் எதையாவது யோசிக்க தூண்டும். அந்த வகையில் படம் தோற்றால் கூட படத்தின் பெயராவது நிலைத்து நிற்கும் வித்தியாசமாய் இருகின்றது என்பதற்காக.! எப்பயும் போல ஒரு ஹீரோ , ஒரு ஹீரோயினை லவ் பன்னார்னு கதையை ஆரம்பிக்கறதா இருந்த திரையரங்குல இருக்கைல வேற படம் ஓடும். அதை அந்த படத்துல நடிச்சி இருக்கறவங்க பார்க்க வேண்டியது தான்.

அப்படியே இந்த படங்களையும் பார்த்தால் நல்லது.







உங்கள் வீட்டில் நிறைய திரைப்படங்களை இன்னும் பார்க்காமல் வைத்து இருக்கின்றீர்களா? முடிந்த வரை உடனே பார்க்க முயற்சி செய்யுங்கள். அதில் இந்த படம் போல சில படங்களாவது இருக்கும்.

தண்டோரா: எனது முந்தைய பதிவு வரலாறு காணாத அளவு ஹிட்ஸ் (1200) இன்ட்லில ஓட்டு 23 கிடைச்சி இருக்கறப்போ என்ன தோனுதுனா , ..............? அப்படி எல்லாம் இருக்காது. எல்லோரும் நல்லா சினிமாவை நேசிப்பவர்கள்னு தான் நினைச்சி சொல்லிகரன் 1200 நன்றிகள் ....!

Saturday, June 18, 2011

தமிழில் நேர்மையான பி கிரேட் படங்கள் நிறைய வர வேண்டும்.

-18 தவிர்த்துவிடுங்கள். இந்த பதிவில் சொல் என்னுடையது. அர்த்தம் உங்களுடையது, என்ற வாரியாரின் வரிகளை மனதில் கொள்ளுங்கள்.

பி-கிரேட்னா என்ன?
ஆங்கிலம் நல்லா படிக்க எழுத தெரிஞ்சவங்க இங்க படிச்சி தெரிஞ்சிக்கங்க. சாதரணமா எனக்கு தெரிந்த தமிழ்ல அதனோட வரையறைகளை சொல்லனும்ன "குறைந்த செலவில், உள்ளரங்க படப்பிடிப்புகளை அதிகமாக கொண்டு, பெரிய அளவில் சம்பளம் வாங்காத நடிகர்களையும் தொழில் நுட்பக்கலைஞர்களையும் கொண்டு, அகநானுரை புறநானுரின் விளகத்துக்குள் கொண்டு வர (புதிய?) முயற்சி செய்ய எடுக்கப்படும் படங்கள்" அப்படின்னு சொல்லலாம்.

புரியலையா? வேற என்ன பண்ண முடியும்? படம் பார்த்து கதை சொல்.
இந்த படத்தோட போஸ்டர் ல பார்த்தோம்னா நடிகர் நடிகையை கட்டிபிடித்துக்கொண்டு (மோப்பம்) இருக்கிறார். அதோடு A வை வட்டத்துக்குள் போட்டு இருகின்றார்கள் (வட்டத்தை விட்டு வெளிய வந்து சிந்திச்சி படம் எடுக்கற இவங்களை ஏன் வட்டத்துக்குள் அடைகிறாங்க?). அது தணிக்கை குழு தருவது (சான்றிதழ்), அல்லது படக்குழுவினர் கேட்டு வாங்குவது.



இதுல என்ன நேர்மை வேண்டி கிடக்கு? இருக்கு. அது எப்ப தெரியும் னா காசு கொடுத்து டிக்கெட் (நுழைவுசீட்டு) வாங்கி திரையங்கில் உள்ளே ஓடி நடுவுல, முன்னாடி இல்லனா பின்னாடி (இது அவங்க அவங்க ஆசைக்கு ஏத்தா போல ) ஒரு சீட்டை புடிச்சி உட்கார்ந்து எப்ப வரும் எப்ப வரும்னு காத்திருந்து கடைசி வரைக்கும் வராம போன பிறகு திரையரங்கை விட்டு வெளிய வரும் போது அடுத்த காட்சிக்கு தயாராகி கொண்டு இருக்கும் ரசிகனிடம் "செம மொக்கை , வேஸ்ட் "அப்படின்னு சொல்லும் போது தான் அவன் முகத்தில் தெரியும். அவன் எவ்ளோ ஏமார்ந்து போய் இருப்பான்? அப்ப போஸ்டர்ல (விளம்பர சுவரொட்டி) போட்ட எல்லா விசயத்திலிருந்தும் அந்த படக்குழு நேர்மை தவறி இருக்குனு தான அர்த்தம்?

ஏன் நிறைய நேர்மையான படங்கள் வர வேண்டும்.? கீழ் உள்ள காணொளி, புகைப்படங்களை பாருங்கள்.




பி கிரேட் படங்களை விட இந்த படங்கள் கிக் இல்ல? இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
இது அனுஷ்கா விபச்சாரிய நடிச்ச படம்.
இது வேட்டைக்காரன். இதுல எது விபச்சாரி வேசத்துக்கு சரியா இருக்கும்? இது அழகு. சைட் அடிக்க ஜாலியா பார்க்கவும்தான் காட்டப்படுதுன்னு சொல்லறவங்க, கல்யாணம் ஆனவன் தன் மனைவியிடமும், காதலிப்பவன் தன் காதலியிடமும், வயதுக்கு வந்தவன் ரோட்டிலும் (செல்லும் பெண்களை) பார்க்காத அந்த நளினமான புடவை சுடிதார்களில் இல்லாத அழகா இதில் காட்டப்படுகின்றது?

இது ஒரு மெகா பட்ஜெட் (அதிக பண செலவு) படம். இந்த படத்துல நார்மலா பார்த்தா கூட இந்த நடிகை தாவணியை வித்தியாசமாய் கட்டிக்கொண்டு இருப்பார். அது அவங்க அப்பா கூட இருந்தாலும் சரி, காதலனுடன் இருந்தாலும் சரி. அதே போல (தெரியுமாருதான்) உடை உடுத்தி இருப்பார். இது இயக்குனரா கேட்டதா. இல்ல இவங்களா தந்ததானு படக்குழுவினருக்கு தான் தெரியும்.

இது உள்ளரங்கில் வீட்டில் இருப்பவர்கள் தனியாக இருப்பது போல காட்சி அமைக்கப்பட்ட பி கிரேட் படம் னு வெளிவந்த படம்.

இது வெளி அரங்கில் எடுக்கப்பட்ட காட்சி அமைப்பு. இது எது உண்மையான பி கிரேட்? போதாத குறைக்கு நெஞ்சில் முகம் புதைப்பது வரையான காட்சிகளும் உண்டு. கிராமத்து படங்களாக இருந்தாலும் கூட பாடல் என்று ஒன்று வைத்து உள்ளாடைகளுடன் ஆட விடும் இயக்குனர்கள் எதை எதிர்பார்த்து அது போல ஒரு காட்சியை திணிகின்றார்கள்? இதை பார்ப்பதர்க்குனு சில ஜொள் பார்டிங்க நாக்கை தொங்க போட்டுக்குனு வரும்னு தான? அதை தாண்டி என்ன சமுகம் சார்ந்த நல்ல விஷயம் இருக்குனு படம் பார்க்கும் சிலர் மீதும் கட்டாயமாக அல்லவா அந்த சதைக்காட்சிகள் திணிக்கப்படுகின்றது?

அதிக பணம் வாங்கி கொண்டு நடித்தால் அது நார்மல். குறைவான பணத்தில் எடுத்தால் அது A? வெளி அரங்கில் விரசமாக எடுத்தால் அது கமர்சியல். உள்ளரங்கில் எடுத்தால் அது A. அதிகமான ஒளி மற்றும் நடிகர்கள் சேந்து இருந்தா அது பெரிய U படம். இல்லனா A. விரசமான வரிகள் இருந்தா அது U/A . சத்தங்கள் மட்டும் இருந்தா அது A. பெரிய நடிகர்கள் படம்னா ஹீரோயின் செம அழகு. சின்ன நடிகர்கள் னா அது செம கட்டை அல்லது அயிட்டம்.? பெரிய படம் னா செம மெசேஜ். சின்ன படம் னா அது மேட்டர் படம். எவ்ளோ பெரிய அநியாயம் ?

U படமும் சரி, A படமும் சரி. ரேனுமே நம்மளை ஏமாத்தறாங்க. சதையை பண்ட பொருளாக வைத்துதான் இன்றைய எல்லா பெரிய பட்ஜெட் படங்களும் வந்துகொண்டு இருகின்றது. அது தான் மெகா ஹிட். அப்பறம் நல்ல படம் எடுக்க எவனுக்கு மனசு வரும்? வருடத்திற்கு 2 அல்லது 3 நல்ல படங்கள் வந்து கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையில் ஏற்ப்படுத்தும் மாற்றங்களை ஒரு பெரிய செலவில் எடுக்கப்படும் குப்பைகள் நிறைந்த மசாலா படங்கள் தடுத்துவிடுகின்றன. இதில் காட்டப்படும் கவர்ச்சி எனப்படும் ஆபாசங்களை தனியாக பி கிரேட் படங்கள் தெளிவாக ? சொல்லிவிட்டால் தானாக இந்த அரைகுறை ஆபாசங்கள் குறைய ஆரம்பித்துவிடும். கறி சாப்பிட முடிவு செய்த பிறகு அது தோலுரித்த கோழியா இருந்தா என்ன , உரிக்காததா இருந்தா என்ன? அனுஷ்கா வும் தமன்னாவும் காட்டும் அரைகுறை சதைகளால் தான் அந்த படங்கள் ஓடுதுனா ஏதோ ஒரு நடிகை காட்டும் முக்கா சதைகளை கொண்ட படமும் தனியாக ஓடட்டுமே?

நாம் பார்க்கும் எல்லா படங்களிலும் அரைகுறை ஆபாசங்கள் நிறைந்து இருக்கும் போது தனியாக முழு ஆபாச படம் வந்தால் தானாக மற்ற படங்கள் ஆபாசத்தை ஒரு பெரிய விசயமாக திணிக்க முடியாது அல்லவா? அதை தாண்டிய கதைகளை யோசிக்க ஆரம்பிக்க அதை மட்டுமே மையமாக கொண்ட படங்கள் நிச்சயம் வர வேண்டும்.

இங்கே என்ன பிரச்சனைனா A படங்களும் நேர்மையானதாக இல்லை என்பது தான்.. ! அவர்களும் இதே அரைகுறைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் நிறைய சொல்ல ஆசை பட்டாலும் வார்தைகள் வர மாட்டேங்குது. (பேசிக்கலி ஐயம் குட் பாய்)


தமிழ் சினிமா எப்போது இந்த சதை சார்ந்த விசயங்கள் மீது ஆர்வம் குறைகின்றதோ அப்போது தான் கதை சார்ந்த திரைப்படங்கள் வரும், அதை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன்.

இந்த பதிவின் மூல கருத்தை சொன்னவர் அருணாச்சலத்தின் அப்பா: நினைத்து பார்க்க : ரஜினி சொல்லும் சுருட்டு கதை.

தண்டோரா: இந்த பதிவை ஹிட் ஆக்கிய வாசகர்களுக்கும், இதே பதிவை நல்ல பதிவு என்று தானாக சென்று பல பக்கங்களில் சொன்ன முகம் தெரியாத தாஸ் அவர்களுக்கும் நன்றி.

Sunday, June 5, 2011

சாமியாருக்கு தகுதியில்லை, சரி. நமக்கு இருக்கின்றதா?


இன்றைய பெரும்பாலான வலைப்பதிவர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். காரணம் சாமியாரின் உண்ணாவிரதப்போரட்டத்தை பற்றி ஒரு கட்டுரையை அல்லது தனது சொந்த கருத்துக்களை எழுதி அதிகமான பாராட்டுக்களையும், பார்வையாளர்களையும் பெற்றே விட்டார்கள். (பெரும்பாலான பதிவுகள் அவருக்கு தகுதி இல்லை என்பதையே மையப்படுத்தி இருந்தனர்.) இன்டலி மற்றும் அதைப்போன்ற தமிழ் தகவல் திரட்டிகளில் அதிகமான ஓட்டுக்களை பெற்று இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். எழுத்தளர்களாக அங்கீகாரம் பெறுவதற்கே இந்த உழைப்பு. அதிலும் வெற்றியும் கிடைத்துவிட்டது. சரி அடுத்து? அடுத்து என்ன , அடுத்த வாரம் வேறு யாரவது விரதம் இருந்தால் அவர்களைப்பற்றியும் (குறைகளை) எழுதி சாதனை படைக்கலாம். எனது இந்த பதிவும் அந்த சாதனை படைத்தால் நானும் அவர்களில் ஒருவன் தான்.

சாமியாரின் குறைகளாக நம்மவர்கள் சொல்லும் காரணங்களில் சில.

1. இவரின் லேகியம் மனித மற்றும் விலங்கு எலும்புகளை கொண்டு செய்யப்பட்டது
2. இந்தியா முழுவதும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே விகித சம்பளம் வழங்க வேண்டும் என்று சொல்லும் இவர் , இவரின் மடத்தில் வேலை பார்த்த 15 பேருக்கு மிக குறைவான சம்பளம் தந்தார்.
3. கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் இவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது?

நியாயமான கேள்விகள் தான். அப்படியே ஆளும் கட்சி சொல்லும் சில குறைகளை கேட்டுவிட்டு வருவோம்.

1. கபில் சிபல்: யோகாசனம் செய்வதை போதிக்கும் சாமியார் எங்களுக்கு அரசியல் ஆசனம் செய்வது எப்படி என்று போதிக்க கூடாது.
2. திக் விஜய் சிங்: அவர் ஒரு வியாபாரி. 5 நட்ச்சத்திர சத்தியாகிரகம் நடத்துகிறார். விரதம் நடத்துவதால் கருப்பு பணம் திரும்ப வந்துவிடாது. காங்கிரஸ் அவரைக்கண்டு பயப்படவில்லை.
3. காவல் துறை: 5000 பேருக்கு யோகாசனம் சொல்லித்தரப்போவதாக அனுமதி வாங்கிவிட்டு உண்ணாவிரதம் நடத்தியதால் கைது செய்தோம்.

நண்பர்களே, இதை கவனித்தீர்களா? நாம் சொல்லும் பெரும்பாலான குறைகளை இவர்கள் சொல்வதில்லை. சொன்னால்? இவர்களின் வண்டவாளங்களை யாராவது தண்டவாளம் ஏற்றிவிடுவார்கள் என்ற பயம். ஏன் என்றால் காங்கிரசில் இப்போது உள்ளவர்கள் யாரும் மாற்று துணி இல்லாமல், அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இல்லை. பொது நலத்தை முழு நேர வேலையாக செய்யும் (அரசியல்வியாதிகள்) இவர்கள் கோடிஸ்வரர்களாக இருக்கும் போது பணம் வாங்கிக்கொண்டு யோகா சொல்லித்தரும் சாமியார் (இல்ல மாமியாரோ) கோடிஸ்வரனாக இருப்பது எந்த வகையில் தவறு என்று நாம் சொல்கின்றோம்?

5 நட்சச்சத்திர விரதம் என்றால், 10 பைசா செலவில்லாமல் மக்களும் அந்த சாமியாரும் கட்டாந்தரை வெய்யிலில் உட்கார்ந்து விரதம் செய்ய வேண்டுமா? நீங்களும் அதைத்தான் எதிர்பார்கின்றீர்களா நண்பர்களே?


இது ஏ சி வசதி செய்யப்படாத கட்டாந்தறையா? அல்லது இவர்கள் சம்பாதித்து கட்டிய டெல்லி பாடியாலா அரண்மனையா? ஆலமரத்தடியில் நடக்கும் பள்ளிகூடங்கள் எதுவும் இன்றைய இந்தியாவில் இல்லையா?

ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து பதவி கொடுத்து, சம்பளம் கொடுத்து, அவர்களுக்கு காவலுக்கு நிற்கும் காவலாளிகளுக்கும் சம்பளம் கொடுக்கும் நாம் கட்டாந்தரையில் அமர்ந்து போராட வேண்டும் அல்லவா? நமக்கு ஒரு வீடு கூட இல்லாத போது இவர்களுக்கு எதுக்கு இத்தனை வீடுகள் அரசாங்க செலவில்? அதுவும் குளிர்சாதன வசதியுடன்? பொட்டல்காடுகளில் தலயில் தலைப்பாகை கட்டிக்கொண்டு ஏர் ஓட்டும் விவசாயியின் ஒரு ரூபாய் கூடவா அவர்கள் அனுபவிக்கும் வசதிகளில் இருக்காது? இன்னும் என் அப்பனை போல எத்தனையோ பேரின் அப்பன்களுக்கு ஏ சி என்றால் என்னவென்று கூட தெரியாதே. அவர்களின் ஓட்டுகளை , பணத்தை சம்பளமாக பெரும் அரசியல் வாதி சாலையில் நடந்தா போய்க்கொண்டு இருக்கின்றான்? ஏ சி கார்கள் படை சூழ அல்லவா நம்மை நிறுத்திவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றான்?

காங்கிரஸ் அவரைக்கண்டு பயந்திருந்தால் இந்நேரம் சிறையில்தான் இருந்திருப்பார் என்று பகலில் சொன்ன திக் விஜய்க்கு அவர் ஏன் இரவில் கைது செய்யப்பட்டார் என்று இந்நேரம் தெரிந்திருக்குமா? பயமில்லாமலா விமான நிலையம் சென்று பேச்சு வார்த்தை நடத்தினீர்கள்? கபில் சிபலுக்கு சாமியார்கள் அரசியல் பாடம் எடுக்க கூடாதாம். பிறக்கும் போதே கபில் அரசியல் வாதியாக பிறந்தார் போல. சரி அவர் சொல்லித்தர வேண்டாம். அவரை குறை சொல்லும் வலைப்பதிவு தோழர்கள் சொல்லுவார்களா? அல்லது அவர்கள் சொன்னாலும் கபில் ஏற்றுக்கொள்ள மாட்டாரா? பின்ன யார் சொல்ல வேண்டும்? யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்றால் இது ஜனநாயகமா? கைதுக்கு காரணம் தவறான முறையில் அனுமதி பெற்றது. அற்ப்புதம் இது. மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஒருவாரமாக தெரிந்த விஷயம் காவல் துறைக்கு இரவு 1 மணிக்குத்தான் யாரோ தொலைபேசியில் அழைத்து சொல்லி இருகின்றார்கள்.

வலைப்பதிவாளர்களின் பார்வையைப் பார்ப்போம். அவருக்கு தகுதி இல்லை சரி. நமக்கு? சில கேள்விகள் கேட்டுக்கொள்வோமா?
1. இதுவரை நமக்கு சரியாக பட்ட மக்கள் போராட்டங்கள் எத்தனை இருக்கும்?
2. அதில் ஒன்றிலாவது நாம் கலந்து கொண்டு இருகின்றோமா?
3. அன்ன ஹசெய்ராவிடம் குறை உள்ளது , சாமியாரிடம் குறை உள்ளது, மாமியாரிடம் குறை உள்ளது?. அப்ப நம்மிடம்? குறை இல்லை என்று வாய் சொன்னால் போய் சொல்லும் குறை இருக்கின்றது என்பதை மனம் உணருமா?
4. யார் போரடினாலும் குறை சொல்லும் நாம் (நான்) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல தயாராக இருக்கின்றோமா?
5. உனக்கும் எனக்கும் வேலை இருக்கின்றது. அதனால் தான் என் குடும்பம் பிழைக்கின்றது என்றால், வேலை இல்லாதவன் போரடிவிட்டு போகட்டுமே? அதை குறைசொல்வதில் அப்படி என்ன ஆனந்தம்?
6. நீங்கள் மானசீகமாக நேசிக்கும் குறைகளற்ற நடிகனும் (அ) அரசியல்வாதியும் ஊழல் செய்பவர்களுக்கும் கருப்பு பணம் சேர்ப்பவர்களுக்கும் மரண தண்டனை (அ) ஆயுள் தண்டனை தர வேண்டும் என்று போராட்டம் செய்வார்கள?
7. உண்ணாவிரதமோ, காவலர்களின் அடி விழும் நடைப்பயணமோ நமது உடம்புக்கு தாங்காது என்று சொல்பவர்கள் தி நகரில் ஓர் இனத்துக்காக நடைபெற்ற கையெழுத்து போடும் போராட்டத்திலாவது கலந்து கொண்டீர்களா?
8. குறைந்த பட்சம் நான் 100 சதவிகிதம் போக்குவரத்து விதியை மதிப்பவன். இதுவரை ஒரு முறைகூட மீறியதில்லை என்று சொல்ல முடியுமா?
8. எல்லப்போரட்டங்களையும் குறை சொல்வதில் ஆர்வம் வருகின்றதா? மன நல மருத்துவர் யாரையாவது தெரியுமா?

ஒன்று போராடுவோம். அல்லது அமைதியாய் இருப்போம். அவர்கள் பிரபலம் ஆவதற்கு போராடுகின்றார்கள் என்றால்? நீங்கள் எதற்கு உங்கள் பதிவுகளை எழுதிக்கொண்டு இருக்கின்றீர்கள்? வலைத்திரட்டியில் இணைத்துகொண்டிருகின்றோம்?

அடுத்து வரப்போகும் கொடுமையை எதிர்க்க துணிவில்லாததால் இன்றைய கொடுமையை ஏற்றுக்கொள்வதில் ஆரம்பிகின்றது அடிமைத்தனம்.

தண்டோரா: நன்றி சொல்ல எந்த காரணமும் பெரிதாக இல்லை ஆயினும் நன்றி. முழுவதுமாக படித்ததற்காக...!

Wednesday, June 1, 2011

சிம்புவின் சிறந்த 10 திரைப்படங்கள்



காதல் அழுவதில்லை சாரி (மன்னிக்கவும்) அழிவதில்லை யில் தொடங்கி இப்போது வெளி வந்துள்ள வானம் திரைப்படம் வரையிலான 13 திரைப்படங்களில் சிம்புவின் சிறந்த 10 திரைப்படங்களை தொகுத்துள்ளோம். இதை தாண்டி குழந்தை நட்சத்திரமாகவும், நட்புக்காகவும் (கெஸ்ட் அப்பியரன்ஸ் - நான் சரியாதான பேசறன்?) பல படங்களில் நடித்து இருக்கின்றார் என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகின்றது.



மேலே பார்த்த வீடியோ (காணொளி) தந்தையும் மகனும் நடித்தது . சிலர் இதை ஆஸ்கார் பெர்போர்மென்ஸ் (வெளிப்படுத்துதல், நடித்தல்) என்று கிண்டல் செய்தாலும் அந்த படத்தின் டைட்டில் கார்டில் (பெயர் போடும் முதல் காட்சி) அவரது பெயர் இடம் பெற்றுள்ளதால் இவர் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகின்றது. ஆனால் கீழ்காணும் காணொளி இடம்பெறும் படத்தை பாருங்கள். அதில் குழந்தைகளின் உணர்வு வெளிப்பாடுகளை. கவனம் : நான் யாரையும் கம்பேர் (ஒப்பீடு) செய்ய சொல்லவில்லை. (children of the heaven)



சிம்புவின் ஓவர் ஆக்டிங் (அதிகப்படியான நடிப்பு) பலரையும் எரிச்சல் அடிய வைத்து இருக்கும். அந்த எரிச்சல் அடைந்த நபர்களில் நானும் ஒருவன். நடிப்பு பிடிக்காததால் அவரை ஒரு நடிகராக ஏற்றுக்கொள்ள மனம் மறுத்துள்ளது பல தருணங்களில். அதே போல சாதாரண மனிதனாக அரை மதிக்க மனம் மறுப்பதற்கும் பல அவரின் அக வாழ்க்கை கூறுகள் இருகின்றது. யாரின் அக வாழ்க்கை பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்ற போதும் சமுதாயத்தில் ஒரு மனிதனாக மதிக்கப்பட நிச்சயம் அவரின் ஒழுக்கம் மிக முக்கியமானது. அதிலும் அவர் சிறந்ததாக இல்லை. அதனாலேயே அவரின் படங்களை எப்போதும் வெறுத்திருக்கின்றேன்.

போதாத குறைக்கு அவரை பற்றிய இந்த பதிவுக்காக சில காணொளி மற்றும் எழுத்துரு தொடர்பான தேடுபொறி வலைத்தளங்களில் பெயரை பதிவு செய்ய ஆரம்பித்தாலே (கீழ்கண்ட படத்தை பார்க்கவும்) என்ன என்னமோ வந்து நிற்கின்றது.
இப்படி இருக்கும் போது ஏன் இந்த 10 படங்களின் தொகுப்பு.? அவரின் சில நல்ல விசயங்களை அல்லது நடவடிக்கைகளை அல்லது படங்களை பாராட்ட வேண்டும் என்பது எனக்குள் இருக்கும் ஒரு நேர்மையான ஏழுத்தாளனின் (எழுத்தாளன்னு ஏத்துபீங்கள?) எண்ணம், கடமை.

சரி படத்திற்கு போகலாம். பட வரிசை பத்தில் பத்தாவது இடம்

10. விண்ணை தாண்டி வருவாயா?

பத்தாவது இடத்தை இந்த படம் பிடிக்க காரணம் ஒரு திரைப்படம் என்பது சமுகத்தில் நல்ல விளைவுகளை ஏற்ப்படுத்த பயன்படும் (பயன்பட்ட) ஒரு அற்ப்புதமான கலை சார்ந்த மீடியா (ஊடகம்). ஆனால் சமீபகாலங்களில் சமுகத்தை சீரழிக்க வைக்கும் காட்சிகள் இல்லாத படங்களை பார்ப்பதே கடினமாகி விட்டதால் அது போன்ற எந்த காட்சியும் இல்லாத படத்தை பாராட்ட வேண்டிய நிலைக்கு தமிழ் திரைப்பட துறை வந்துவிட்டது. (இதை படித்துபாருங்கள் ) அந்த வகையில் இந்த திரைப்படம் அவரின் முந்தைய எல்லா திரைப்படங்களை விடவும் நல்ல படம் தான். நல்ல அழகான ஒளிப்பதிவு மற்றும் இசை. காதலை மிக சாதரணமாக சொல்லியதும் இறுதிக்காட்சியில் இடம்பெறும் ட்விஸ்ட் (உண்மையை திரித்தல்) ஆச்சர்யமானதாகவும் இருந்தது.
இந்த படத்தில் சிம்பு விரலை ஆட்டாமல் இருந்ததாலேயே பலர் அவரை இந்த படத்தில் இருந்து இவரை ரசிக்க ஆரம்பித்துவிட்டர்கள் என்று அவருக்கே புரிந்து இருக்கும். கௌதமை தவிர வேறு யாரவது இந்த திரைப்படத்தின் இயக்குனராக இருந்து இருந்தால் ? என்ன பாடு படுத்தி இருப்பாரோ?



நான் திரையரங்கில் பார்த்த முதல் சிம்புவின் திரைப்படம் இது. அதை இரண்டாவது முறையும் பார்க்க வைத்த படம். (வேறு எந்த படத்தையும் இரண்டு முறை திரையரங்கில் பார்த்தது இல்லை). படத்தில் சிம்புவை பற்றி? இயக்குனர் ஒளிப்பதிவாளர் இசைஅமைப்பாளர் நடிகர்கள் என்ற முறையே இவர் நான்காவது இடத்தைதான் பிடித்து இருக்கின்றார். ஒருவேளை அதனால கூட இந்த படம் இவருக்கு ஒரு சிறந்த படமாக அமைந்து இருக்கலாம். அடுத்த படத்திற்கு போகலாம்.



9.



8.



7.



6.



5.



4.



3.



2.


1.வானம்

தமிழில் வரும் நல்ல படத்தை நடிகர் இயக்குனர் நடிகைகள் என்பதை தாண்டி (கடந்து) வரவேற்க வேண்டியது நமது கடமை. அந்த வகையில் நல்ல கருத்துக்களை முன் வைத்து இருக்கும் இந்த படம் நிச்சயம் சிம்புவின் திரைப்பயணத்தில் ஒரு பொக்கிஷம். பிற மொழி நல்ல திரைப்படங்களை பாராட்டும் நாம் நிச்சயம் இந்த படத்தை பாராட்டுவதில் தவறே இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.

மனிதாபிமானம், கதை மாந்தர்கள், கதை சொன்ன விதம் ஆகியவை இந்த படத்தை சிம்புவின் மற்ற படங்களில் இருந்து முற்றிலும் வேறு ஒரு பக்கம் மாற்றி வைக்கின்றது. இதை விட ஒரு சிறந்த படத்தில் இவர் நடிப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை.



காரணம் முடிந்த வரை இந்த படத்தையே இவர் இதன் மூலத்திலிருந்து (வேதம்) மாற்றி இருக்கின்றார் என்னும் குற்றச்சாட்டுகள் வலைத்தளங்களில் பரவி கிடக்கின்றது. இதிலும் கதை, வசனம் ( உரையாடல் ) காட்சி அமைப்பு , நடிகர்கள் என்று நான்காவது (என்னை பொறுத்தவரை) இடத்தைதான் பிடித்து இருக்கின்றார்.





மீதி உள்ள காலி இடங்களை (எட்டு) அவரின் வாழ்நாட்களுக்குள் பூர்த்தி செய்வார் என்று நம்புவோம். எதிர் பார்ப்போம்.

வானம் படத்தை பாராட்டவே இந்த பதிவை ஆரம்பித்தேன். ஆனால் மனதின் எண்ணங்கள் இப்படி எழுத வைத்துவிட்டது.

படத்தை பற்றி விமர்சனம் செய்து இருக்கலாம். ஆனால் நான் பொதுவாக எந்த படத்தையும் விமர்சனம் செய்வதில்லை. மாறாக நல்லதை அறிமுகம் செய்யவே விரும்புகின்றேன்.

வானம் நல்லது.



ஏன் சிம்பு இப்படி ?

தண்டோரா: ஹாட்ரிக் (தொடர்ந்து மூன்று) பதிவுகளை பாப்புலர் (பிரபலம்) ஆக்கிய இன்ட்லி வாசகர்களுக்கும், படித்தவர்களுக்கும் மேல் வலப்புறம் முதல் இடத்தில் உள்ள pool (வாக்களிப்பு) லில் வாக்களித்தவர்களுக்கும் நன்றி.