Tuesday, March 8, 2011

ரெண்டும் கெட்டான்


எப்போதும் ஹெல்மெட் அணிந்தவுடன் வண்டியை ஸ்டார்ட் செய்பவன் சக்தி. போன வேலை முடியாததால் யோசித்துக்கொண்டே வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு வந்தான். அவன் மூளை சொல்லியது "அரை லிட்டர் பெட்ரோல் வீணா போய் இருக்கும்" என்று. மனம் சொல்லியது "பத்து நாள், தான் படிக்க விரும்பும் நாளிதழ் வாங்கி இருக்கலாம்" என்று. அதே நேரத்தில் திரும்ப வேண்டிய வளைவு வந்தது. மரவட்டை கால்களை போல வண்டிகள் ஊர்ந்து கொண்டு இருந்ததால் ஓரமாக நின்றான்.

திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு இருந்தான் இடையில் ஊடுருவ முடியுமா என்று. அப்போது அங்கு ஒருவர் வந்து நின்றார். ஒரு கையில் ஆப்பிள் கமலா பழங்கள் உள்ள இரண்டு பிளாஸ்டிக் பைகளும் மற்றொரு கையில் கோணிப்பையால் சுற்றப்பட்ட கத்தியுடனும். அந்த கத்தியின் முனை மரத்திலிருந்து வெளிவந்த 5 நாள் ஆன வாழை பூ போல லேசாக வளைந்து வெளியே தெரிந்தது. வெள்ளை தாடி, மரத்தின் ரத்தத்தால் கரையான சட்டை. கசங்கிய லுங்கி . அவர் ஏதோ பேச வந்தார்.

சக்தியின் மூளை சொல்லியது " பணம் கேட்க போகின்றார் , ஜாக்கிரதை !". மனம் சொல்லியது " லிப்ட் கூட கேட்கலாம் அல்லவா?". அவர் " தம்பி இருந்த காசுல பழம் வாங்கிட்டேன். பக்கத்துக்கு ஊருக்கு போகணும். ஒரு அஞ்சு ரூபா தரியா?". மேல் பாக்கெட்டில் பார்த்தான். இரண்டு 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தது. அறிவுக்கு (மூளை) நிம்மதி " இல்லையென்று சொல்லிவிடு". மனம் சொல்லியது " பர்சை திறந்து பார்க்கலாமே". எழுந்து நின்று எடுத்து பார்த்தான். பத்து ரூபாய் நோட்டுக்கள் மூன்றாவது இருந்து இருக்கும் குறைந்த பட்சம். மூளை சொல்லியது " வேண்டா........"!. அதற்குள் மனம் கொடுத்துவிட உத்தரவு இட்டதால் அனிச்சையாய் பணம் தரப்பட்டு விட்டது. அவர் முகத்தில் சந்தோசம். "நன்றாக ஏமார்ந்தாய்" என்றது அறிவு. "அப்பா வயசு இருக்கும்" என்றது மனம்.


அவருக்கு தெரிந்த வார்த்தைகளை கொண்டு நன்றி சொல்லிக்கொண்டு சுற்றி வந்தார். "நீங்கள் இப்படிக்க போன நானும் வரலாமா" என்றார், பணத்தை பாக்கெட்டில் வைத்தவாறே..! "நான் இந்த பக்கம் போறானே" என்று திரும்ப போகும் வளைவை காட்டினான். "அப்படியா? சரிப்பா" என்று முன்னோக்கி நடக்க ஆரம்பித்தார் அவர். இடம் கிடைத்ததால் விருட்டென கிளம்பியது வண்டி. வளைவில் திரும்பிய பின்பு தலை திரும்பி பார்த்தது அவரை. அவர் நின்று இருந்த இடத்தின் அருகில் இருந்தது டாஸ்மாக் . சிரித்தது அறிவு. "அங்கே பார். அவர் கையிலிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு உட்கார முயற்சிக்கிறார். அவர் ஒன்றும் கடையில் நுழையவில்லை. கை பாரம் தாங்க முடியாததால் ஓய்வுக்காக கூட அங்கே உட்கர்ந்து இருக்கலாம் அல்லவா?" என்றது மனம்.

"அப்படியா? சரி இரு பார்த்துவிடலாம்" என்று பிரேக்கை போட கால் முயற்சி செய்ய " வேண்டாம் போகலாம் " என்று ஆக்சிலேட்டரை முறுக்கியது கை. அதை பற்றி மேலும் நினைக்க இடம் தராமல் தன்னையும் மரவட்டைகளின் ஒரு காலாக்கியது மனம். வண்டியை ஓட்டுவதில் கவனம் செலுத்தியது அறிவு. "எல்லா பணத்தையுமா செலவழித்து பழம் வாங்கி இருப்பார்? பணத்தை வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு லிப்ட் கேட்டாரே?" மனம் யோசிக்க தொடங்கி உடனே முடித்துக்கொண்டது .

மனம் என்ன நினைத்து இருக்கும்? இவர் டாஸ்மாக் உள்ளே செல்வதை பார்த்து இருந்தால் அடுத்த முறை யாராவது உதவி கேட்டால் அறிவு ஜெயித்துவிடும் என்றா?

எது எப்படியோ. அறிவு சொல்வதே நடக்கின்றது. மனமே பல நேரங்களில் ஜெயிக்கின்றது. மனமே ஜெயிக்கட்டும்.

1 comment:

உங்களுள் ஒருவன் said...

இப்படி சாலைகளில் நறைய பெற பார்த்து இருகிறன்..... பல முறை முளை சொல்லுவதை கேட்டு பணம் குடுகாமலும்..... சில முறை மனது சொல்லுவதற்காக பணமும் குடுத்து இருகிறன் நண்பா........