Saturday, August 27, 2011

வீட்டிற்க்கு வெளியே......? உஷார்.!

இது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது குறைந்த பட்சம் கடைபிடிக்க வேண்டிய, கடை பிடித்தால் நன்மை பயக்கும் எனக்கு தெரிந்த தகவல்கள்.

நடந்து செல்லும் போது:

* நடந்து செல்லும் போது இடது புறமாக செல்வதை விட வலது புறமாக நடந்து செல்வது நம் ஊரை பொறுத்த வரையில் நல்லது. காரணம் இடது புறம் நடந்தா நமக்கு பின்னாடி வரவன் நம்மை வந்து இடிச்சதுக்கு அப்பறம் தான் நமக்கு தெரிய வரும். இதே வலப்புறம் நடந்து போனா எதிரில் வருவதை பார்த்து கொஞ்சம் உஷாராகலாம்.

* கூட குழந்தைகளை கூட்டிட்டு போகும் போது நாம் சாலையின் பக்கமும் குழந்தையை நடைபாதையின் பக்கமும் கை பிடித்து அழைத்து செல்வது நல்லது. காரணம் குழந்தைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் நடக்காது. ஆடி ஆடி தான் நடந்து வரும்.

* நம் பேருந்துகளின் பக்க வாட்டில் நடக்கும் போது தள்ளி நடப்பது நலம். இல்லையென்றால் உங்கள் மேல் எச்சில் வந்து விழ 99 சதவிகித வாய்ப்பு உள்ளது.

* நண்பர்கள் யாரையாவது எதிர்பார்த்து கொண்டு திரும்பி திரும்பி பார்த்தவாறு நடந்தால் உங்களிடம் ஆட்டோகார அண்ணன் வந்து சவாரி எங்க போகணும் என்று கேட்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதில் ஏற மறுத்தல் சாவு கிராக்கியாக்கப்படுவீர்கள்.

* அவசர வேலையாக நடக்கும் போது உங்கள் கை மற்றவர்கள் மீது பட வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் பார்த்து ஆட்டுங்க கையை.

* ஓட வேண்டும் என்று முடிவு செய்த பின்பு சாலையின் ஓரம் ஓடுங்கள். ஆனால் சாலையை சந்திப்புகளை நின்று, கவனமாக கடந்து செல்லுங்கள்.

* நீங்கள் ஓரமாக நல்லபடியாக நடந்தால் கூட உங்கள் மேல் ஏதாவது சிறு வாகனம் வந்து லேசாக மோதினால், உராசினால் கண்டுகொள்ளாமல் மன்னித்து விட்டு செல்லுதல் நமது மனதிற்கு நலம். இல்லையென்றால் தேவையில்லாத ரத்த அழுத்தம் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

* படிக்கட்டுகளில் நடக்கும் போது அவசரப்பட்டால் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய வாய்ப்பு வரலாம். ஸ்டைலான நடை, ஓட்டம் அங்க வேண்டாம்.

* சாலையின் நடுவில் எச்சிலை துப்புவது, குப்பையை போடுவது போன்ற வேலைகளை தயவு செய்து செய்ய வேண்டாம்.

* போய் சேர வேண்டிய இடத்தை பொறுத்து கிளம்பும் முன்னரே அவசர வேலைகளை (1&2) முடித்துவிடுவது நலம். இல்லையென்றால் நடு சாலையில் நாயை போல காலை தூக்காமல் வேறு மாதிரி நாம் செயல்பட வேண்டி வரலாம்.

*நடந்து கொண்டிருக்கும் போது பாக்கெட்டுகளில் இருந்து எதையும் எடுக்காதீர்கள். வேறு சில பொருட்கள் தவறி விழ வாய்ப்பு இருக்கின்றது. நாம் நடப்பதால் அதை கவனிக்காமல் விட்டுவிடுவோம்.

* குடும்பத்தோடு போகும் போது சத்தம் போடாமல் (சண்டை அல்லது வாக்கு வாதம்) போவது நலம். இல்லையென்றால் போவோர் வருவோர் எல்லாம் உங்களை காட்சி பொருளாக மாற்ற வாய்ப்பு உள்ளது.

* நடந்து கொண்டே புத்தகமோ , செய்தி தாள்களையோ படிப்பது நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்துவதாக தோன்றலாம். ஆனால் பல நேரங்களில் பாதாள சாக்கடை திட்டம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாதாள சாக்கடை திட்டம் இல்லாத இடங்களில் கூட சாதாரணமாக ஏதோ சில பள்ளங்களை பார்க்க முடியும்.

* கடக்க வேண்டிய சந்திப்பில் நீங்கள் கடக்க, பச்சை விளக்கு சிக்னலில் எறிந்த உடனே ஓடாதீர்கள். நமது ஊ்ரில் மஞ்சள் விளக்கை பார்த்த உடன் வண்டியை நிறுத்த யாரும் பழக்கப்படவில்லை. அதனால் அப்போதும் பார்த்து கடப்பது நல்லது.

* சாலையின் சந்திப்புகளில், ரயில்வே கேட்களில் கடக்கும் போது செல்போன் உபயோகிப்பது என்பது 108 க்கு அழைப்பு விடுப்பதற்கு சமம். சமீபத்தில் ஒரு பெண் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது ரயில் மோதி இறந்து விட்டார். அவரை காப்பாற்ற முயற்சி செய்ய பலரும் கத்தினார்கள். ஆனால் அந்த பெண்ணால் அந்த சத்தத்தை கேட்க முடியவில்லை. காரணம் ஹெட் செட்.* மற்றவர்கள் கடக்கின்றார்கள் என்பதற்காக நீங்கள் அவர்களோடு சேர்ந்து சாலையை கவனிக்காமல் கடக்க முற்படாதீர்கள். பெரிய ஆபத்து வரலாம்.

* உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் பதிவு செய்யுங்கள் பின்னூட்டத்தில்.


அடுத்த பதிவில் வாகன பயணம் ... (உண்மையில் உஷாராக இருக்க வேண்டியது அதில் தான்)

1 comment:

மைந்தன் சிவா said...

ஹிஹிஹி சிரித்தேன் ஆனால் உண்மையான விடயங்கள் நாங்களும் நாளாந்த வாழ்வில் பார்ப்பன!!