Tuesday, October 4, 2011

இந்த பாட்டை நீங்கள் கேட்டதில்லையா?

உண்மையை சொல்லுகின்றேன். இந்த பாடலை எழுதிய கவிஞர் ஆறாவது தேசிய விருது இந்த பாடலுக்காக பெற்றார் என்ற போது கூட இந்த பாடலை நான் கண்டுகொள்ளவில்லை. சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஹீரோயினாக இல்லாத ஒரு பெண் இந்த படத்திற்காக வாங்கும் போது கூட இந்த படத்தை பார்க்க ஆவல் வரவில்லை. பின்னர் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த படத்தை பார்த்தேன். ஆரம்ப பெயர் போடும் காட்சியில் பின்ணணியில் கேட்கும் பாடலும் அதற்க்கு ஒளி வடிவமாக கோர்க்கப்பட்ட புகைப்படங்களும் என்னில் அப்படியே பதிந்து விட்டிருக்கும் போல எண்ணுகின்றேன்.

அதே போல படத்தின் கடைசி காட்சியும் மனதை இறுகசெய்யும். . பார்த்து மறந்துவிட்டு போன அந்த பாடல் ஒரு தருணத்தில் இணையத்தின் வழியாக சில mp3 பாடல்களை தரவிறக்கம் செய்ய தேடியபோது இந்த பாடல் ஏதேச்சையாக வலையில் வர அந்த படத்தின் பாடலில் வரும் விசுவல் ஞாபகம் வர சரி தரவிறக்கம் செய்து வைப்போம் என்று மனதில் தோன்ற தரவிறக்கம் செய்து கைப்பேசியில் வைத்திருந்தேன். எதோ ஒரு நெடுந்தூர பயணத்தில் ஹெட் செட் மூலமாக கேட்க நேர்ந்த போது மீண்டும் மீண்டும் அதே பாடலை பயணம் முழுவதும் rewind செய்து கேட்க வைத்து விட்டது அந்த இசையும் வரியும். சமீப காலமாக என்னை இந்த பாடல் அளவுக்கு அதிகமாகவே வசிகரித்து விட்டது.




கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுகாட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும் எந்த புதரிலும் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா ..... .
கரட்டு மேட்டையே மாத்துனா
அவ கல்லபுழிஞ்சி கஞ்சி ஊத்துனா
கரட்டு மேட்டையே மாத்துனா
அவ கல்லபுழிஞ்சி கஞ்சி ஊத்துனா .
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே

உழவு காடுல வெத வெதப்பா
ஓலைகரயில கூழ் குடிப்பா
ஆவாரம் -குழையில கை துடைப்பா
பாவமப்பா .....
வேலி முள்ளில் அவ விறகெடுப்பா
நாழி அரிசி வச்சு ஓலையரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசிர் வளப்பா
தியாகமப்பா ...
கிழக்கு விடியும் முன்ன முழிக்கிறா
அவ உலக்க பிடிச்சுதான் தேராகிறா
மண்ண கிண்டித்தான் பொழக்கிறா
உடல் மக்கிபோக மட்டும் உழைக்கிறா...

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே

தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில நேசமில்ல ...
தாய் கையில் என்ன மந்திரமா
கேப்பகளியில் ஒரு நெய் -ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன்-ஒழுகும்
அவ சமைக்கையில
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது
தாய் ரெண்டு தாய் இருக்குதா ..

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே

வைரமுத்துவின் வரிகள், ரஹனந்தன் இசையில் கேட்க மனம் கரையும். இரு பதிப்புகள் உள்ள இந்த பாடலை பாடியவர்கள் விஜய் பிரகாஷ், உன்னி மேனன். எனக்கு விஜய் பிரகாஷ் குரல் பிடித்திருந்தது. நீங்களும் தனிமையில் இருக்கும் போது ஒரு முறை கேட்டு பாருங்கள். மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும். அப்படி தூண்டவில்லை எனில் நீங்கள் நகரம் சார்ந்தவராக இருக்க வாய்ப்பு உள்ளது. பரவாயில்லை. அந்த புகைப்படங்களை பாருங்கள். உங்களுக்கு அதிசயமாக இருக்கும், ஆனால் அதுதான் எங்களின் வாழ்க்கை.

தமிழ் பாடலுக்கு தேசிய விருதை வாங்கி தந்த இசையை உருவாக்கிய இசை அமைப்பாளரை நாம் ஏனோ கண்டுகொள்ளவில்லை. ஒரு வேலை அந்த படத்தில் ஒரு கிராமத்து குத்து பாட்டு இருந்து இருந்தா தமிழ் சமுகம் கொண்டாடி இருக்குமோ?

1 comment:

K.s.s.Rajh said...

தேசிய விருதுக்கு பொருத்தமான பாடல்தான் பாஸ்